ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உக்ரைனில் 27 பேர் உயிரிழப்பு

 

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. இருதரப்பும் அமைதி பேச்சுவார்தைக்கு மறுத்து பரஸ்பரம் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொது உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள ஒரு கிடங்கின் மீது நேற்று முன்தினம் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் அந்தக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து அங்கு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான கிடங்கில் ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தாகவும், அவை வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது. இதில் அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “குடியிருப்பு பகுதி அருகே ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

உக்ரைன் பிரதமர் செர்ஹி கோரெட்ஸ்கி கூறும்போது, “அதிகாரிகளின் அலட்சியப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலை இனி ஒருபோதும் ஏற்படாத வகையில், இதற்கு பொறுப்பான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.