அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதி வரைவில் உடன்பாடு

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கியது. இந்த போர் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.எனினும் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்ததோடு இருநாடுகளும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்ட ஒப்பந்தத்தின் இறுதி வரைவை அமெரிக்காவும், ஈரானும் ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்பிரதமர் ஷெரீப் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அமெரிக்காவும் ஈரானும் இறுதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் இறுதி வரைவுக்கு வந்துள்ளனர். ஒப்பந்தத்தின் இறுதி வரைவு குறித்து இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். அமைதி இப்போது இருந்தது போல இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘‘அமெரிக்கா, ஈரான் இடையேயான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அதிபர் டிரம்ப்பும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

* ஈரான் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஈரானின் முயற்சிகளை அமெரிக்கா முறியடித்துள்ளது. இது குறித்து அமெரிக்க கடற்படை கூறுகையில், ‘‘ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களைத் தாக்கும் முயற்சியாக ஈரான் பல ஒரு வழித் தாக்குதல்கள் டிரோன்களை ஏவியுள்ளது. அமெரிக்க படைகள் அவை அனைத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து எந்தவித தடையுமின்றி தொடர்கின்றது. சர்வதேச வர்த்தகப் பாதை போக்குவரத்துக்கு தொடர்ந்து திறந்தே உள்ளது” என தெரிவித்துள்ளது.