ரூ.3.50 லட்சம் ரொக்கம் பிச்சைக்காரப்சாவித்ரம்மா வீட்டில் : 10 மூட்டைகளில் நாணயம்!

 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே வசித்து வரும் சாவித்ரம்மா (65) என்ற முதியவர் வீட்டில் இருந்து சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், வாழ்க்கைச் சூழல் காரணமாகத் தனித்து விடப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிச்சை எடுத்துத் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சாவித்ரம்மா வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அவருக்குத் தேவையான உணவு மற்றும் உதவிகளைச் செய்ய முற்பட்டபோது, வீடு முழுவதும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூட்டைகளில் செல்லாத பழைய நாணயங்கள், புதிய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் குவிந்து கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவரது வீட்டில் இருந்த மூட்டைகளைப் பிரித்து பணத்தை எண்ணத் தொடங்கினர். சுமார் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட இந்த எண்ணும் பணியின் முடிவில், மொத்தம் 10 மூட்டைகளில் நாணயங்களும், 2 மூட்டைகளில் ரூபாய் நோட்டுகளுமாகச் சேர்த்து ரூ.3.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருப்பது தெரியவந்தது.
முதியவயதில் உடல்நலக் குறைவால் அவதிப்படும் சாவித்ரம்மாவிற்கு உரிய மருத்துவச் சிகிச்சைகளை அளிக்கத் தன்னார்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சேமிப்புத் தொகையைக் பாதுகாப்பாக அவரது பெயரிலேயே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து, அவரது எதிர்கால வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்த உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.