கணவரை கொன்று குஜராத் தொழிற்சாலையில் புதைப்பு.. அம்பலம்-

 

சொந்தக் கணவனைக் காதலனுடன் சேர்ந்து விஷம் வைத்துக் கொன்று, தொழிற்சாலை வளாகத்திற்குள் புதைத்துவிட்டு, அவர் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாகக் கூறி இரண்டு ஆண்டுகளாக ஊரையே ஏமாற்றி வந்த மனைவியின் கொடூர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜிக்னேஷை அப்பகுதியில் யாரும் பார்த்ததில்லை. இது குறித்து உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கேட்டபோதெல்லாம், “என் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்; விரைவில் ஊருக்கு வந்து விடுவார்” என்று பிரித்வி மிகவும் இயல்பாகக் கூறி வந்துள்ளார். இதை அனைவரும் உண்மையென நம்பி ஏமாந்து போயிருந்தனர்.

சந்தேகத்தைக் கிளப்பிய வெளிநாட்டுப் பயணம்
சமீபத்தில் ஜிக்னேஷின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கு சென்றதும் ஜிக்னேஷைச் சந்தித்துப் பேசலாம் என நினைத்த அவர், பிரித்வியிடம் சென்று ஜிக்னேஷின் ஆஸ்திரேலிய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கேட்டுள்ளார். ஆனால், அதைக் கேட்டதும் பதற்றமடைந்த பிரித்வி, முகவரியைத் தராமல் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். இதனால் அந்த உறவினருக்குப் பலத்த சந்தேகம் எழுந்தது. உடனே இந்த விஷயத்தை ஜிக்னேஷின் சகோதரரான அசோக்கிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அசோக் நேரில் சென்று பிரித்வியிடம் தன் சகோதரனைப் பற்றிக் கேட்டபோதும், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அசோக், தனது சகோதரரைக் காணவில்லை என்றும், அவரது மாயமானதில் சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் தீவிர விசாரணை..
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்டமாக ஜிக்னேஷின் மனைவி பிரித்வியின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அவரது நடவடிக்கைகளில் தொடர்ந்து சந்தேகம் நீடித்ததால், அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்துத் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் வழக்கம் போலக் கதைகளை அளந்துவிட்ட பிரித்வி, போலீசாரின் கெடுபிடியான விசாரணையைக் தாங்க முடியாமல் உண்மை முழுவதையும் உடைத்தார்.

கொலை திட்டம் தீட்டியது எப்படி?
பிரித்விக்குத் திருமணத்திற்கு முன்பிருந்தே நிலேஷ் என்பவருடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் ரகசியமாகத் தங்கள் உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் ஜிக்னேஷிற்குத் தெரியவந்தால் பிரச்சனை ஏற்படும் எனக் கருதிய காதலர்கள் இருவரும், அவரை முற்றிலும் ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, ஜிக்னேஷ் அருந்திய மதுபானத்தில் நச்சைக் கலந்து கொடுத்துக் கொன்றுள்ளனர். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில், ஜிக்னேஷின் உடலை ஒரு தொழிற்சாலை வளாகத்திற்குள் எடுத்துச் சென்று, சுமார் 12 அடி ஆழத்திற்குப் பெரிய குழி தோண்டிப் புதைத்துள்ளனர். அதன் பிறகே, “கணவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்” என்ற நாடகத்தை பிரித்வி தொடங்கடியுள்ளார்.

12 அடி ஆழத்தில்எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
ஒரு சினிமா கதையைப் போல பிரித்வி விவரித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர் அடையாளம் காட்டிய தொழிற்சாலை வளாகத்திற்குச் சென்று குழியைத் தோண்டினர். அங்கு புதைக்கப்பட்டிருந்த ஜிக்னேஷின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு, டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொலையை மறைத்து 2 ஆண்டுகளாக அனைவரையும் முட்டாளாக்கி வந்த பிரித்வி மற்றும் அவரது காதலன் நிலேஷ் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம், கள்ளக்காதல் எனச் சமூகச் சீரழிவுகளால் அரங்கேறும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.