டெல்லி ரயில் நிலையத்ல் பயங்கரம் -சூட்கேஸில் கிடந்த ஆண் சடலம். சிசிடிவில் சிக்கிய  உருவம்

 

டெல்லியை அடுத்த ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் இருந்த சூட்கேசில் அழகிய நிலையில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது 300 சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், வெட்டப்பட்ட நிலையில் அழுகிய ஆண் சடலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடந்த சடலம்
இந்த வழக்கில் தொடர்புடைய தம்பதியைக் கண்டறிய சென்னை சென்ட்ரல், சென்னை பார்க் மற்றும் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் நிலையங்களில் உள்ள 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைத் தமிழ்நாடு அரசு ரயில்வே காவல்த்துறையினர் (GRP) தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது பொதுப் பெட்டியில் (General Coach) கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை ரயில்வே ஊழியர்கள் சோதனையிட்டனர். அதில், தலை மற்றும் சில உடல் பாகங்கள் இல்லாத நிலையில், அழுகிய ஒரு ஆணின் உடல் பாகங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த உத்திரப்பிரதேச ரயில்வே போலீஸார், உடனடியாகத் தமிழ்நாடு அரசு ரயில்வே போலீஸின் உதவியை நாடினர்.

இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய போலீஸாருக்குச் முக்கியத் தடயம் கிடைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் அந்தச் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, ரயிலில் ஏறும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அந்தத் தம்பதி சூட்கேஸை ரயில் பெட்டிக்குள்ளேயே விட்டுவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே இறங்கிச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து நடந்து சென்னை பார்க் ரயில் நிலையத்திற்குச் சென்று, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் ஏறித் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

அவர்களது உருவம் சிசிடிவியில் பதிவாகியிருந்தாலும், அவர்கள் யார் என்பதை இன்னமும் அடையாளங்காண முடியவில்லை என்றும், புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள கூடுதல் கேமரா பதிவுகளைக் கொண்டு அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூட்கேஸுக்குள் இருந்து சென்னையின் பிரபல துணிக்கடை ஒன்றின் கவர் மற்றும் ரசீதுகளை ஆக்ரா ரயில்வே போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் பேரில் விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பதைக் கண்டறியவும், கொலையின் பின்னணியைத் தெரிந்துகொள்ளவும், சடலத்தின் புகைப்படங்கள் மற்றும் வேறு தடயங்களை வழங்குமாறு உத்திரப்பிரதேச போலீஸாரிடம் தமிழ்நாடு ஜிஆர்பி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் (RPF) இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் பாகங்களின் தடயவியல் முடிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளையும், கொல்லப்பட்டவர் யார் என்பதையும் கண்டறிய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.