ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கி 6 மாதமாகி விட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை தீர்வு எட்டப்படாமல் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கான 60 நாள் காலக்கெடு கடந்த வாரத்துடன் முடிந்து விட்டது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தடைபட்டு நிற்கிறது.
இதற்கிடையே, ஈரான் அதிபர் பெசேஷ்கியனின் உரையை அரசின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் பெசேஷ்கியன் கூறியிருப்பதாவது: போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற தற்போதைய நிலையில் இருந்து வெளியேற வேண்டுமென்றால், அமெரிக்கா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிப்பதே சிறந்த வழி. கண்ணியம், விவேகம், தேச நலன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மிகச்சிறந்ததாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.அன்றாட உலகச் செய்திகளைப் பின்தொடர்வது
இந்த ஒப்பந்தத்தில் சரணடைதலைக் குறிக்கும் ஒரு விதிமுறை கூட இல்லை. எங்கள் உச்ச தலைவர் கொள்கைகளை வகுக்கிறார். நாங்கள் அந்த பாதையை பின்பற்றுகிறோம். இத்தகைய முட்டுக்கட்டை நிலவும் சூழலில் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முடியாது. மூலதனமும் பணமும் அபாயங்களுக்கு வழிவகுக்கக் கூடியவை. நாங்கள் அந்த அபாயத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்’’ என்றார்.
ஈரான் அதிபர் குறிப்பிடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்கா-ஈரான் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்து வருகிறது. இந்த சூழலில், மீண்டும் மத்தியஸ்திற்கான முயற்சியாக பாகிஸ்தான் முப்படை தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசீம் முனீர் இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு செல்கிறார்.
ஈரானுக்கு எந்த வகையிலும் உதவும் நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் மீது அதிபர் டிரம்ப் பொருளாதார போரை தொடங்கியிருக்கிறார். இந்த சூழலில் ஈரானின் பாதுகாப்பு தலைவர் மோசென் ரெசாய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடையில் இணையும் எந்த நாடும் எங்களின் எதிரியாக கருதப்படுவர். அவர்கள் மீது தகுந்த பதிலடி தரப்படும்’’ என அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளை எச்சரித்துள்ளார். இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் ஒருபகுதியாக சித்திரிக்கும் புகைப்படங்களை மீண்டும் ஒருமுறை அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.



