கதவு கைப்பிடி பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவில் டெஸ்லா உள்ளிட்ட பிற நிறுவனங்கள் சுமார் 40 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மறைக்கப்பட்ட அல்லது ப்ளஷ் வகை கார் கைப்பிடிகளுக்கு 2027ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சமயங்களில், மின்சார அமைப்பு செயலிழப்பது போன்ற சூழல்களில் இந்த வகை கார் கைப்பிடிகள் பயனர்கள் விரைவாக கதவை திறந்து வெளியேறுவதை தடுக்கலாம் அல்லது வெளியே உள்ள மீட்புக் குழுவினர் உள்ளே நுழைவதை தடுக்கலாம் என சீன அரசு கூறி உள்ளது. வடிவமைப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதற்கான நடவடிக்கையை சீன அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கதவு கைப்பிடி பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பல கார் நிறுவனங்கள் தங்களின் கார்களை திரும்பப் பெற்று வருகின்றன. அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மாடல் 3, மாடல் ஒய், மாடல் எக்ஸ் மற்றும் மாடல் எஸ் உள்ளிட்ட 29.8 லட்சம் மின்சார கார்களை திரும்பப் பெறுவதாக சீனாவின் சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதே போல, சீன தொழில்நுட்ப நிறுவனமான ஜாவ்மி 3.9 லட்சம் கார்களையும், ஹாங்சூவைச் சேர்ந்த லீப்மோட்டார் நிறுவனம் 3.7 லட்சம் கார்களையும் திரும்பப் பெறுகிறது. கீலி, எக்ஸ்பெங் உள்ளிட்ட பிற சீன கார் தயாரிப்பாளர்களும் சில வாகனங்களை திரும்பப் பெற்று வருகின்றன.



