IOB வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த 2,179 கிராம் தங்க நகைகள் மாயமான சம்பவத்தில் சுமார் 21 வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றிய பொட்னூரு முரளி கிருஷ்ணா, வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று வேறு இடங்களில் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த சுமார் 2,179 கிராம் தங்க நகைகளை திருடி, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்ததாக வங்கியின் கிளை உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி மூலம் வங்கிக்கு சுமார் ரூ.3.09 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் நகைகளில் கைவரிசை
சென்னை அயனாவரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இங்கு சுமார் 21 வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளை வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றிய பொட்னூரு முரளி கிருஷ்ணா என்பவர் முறைகேடாக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்காக வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்த நிலையில், அந்த நகைகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் உதவி மேலாளர் எடுத்துச் சென்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கத்திற்கு பதிலாக போலி நகைகள்
வாடிக்கையாளர்களின் உண்மையான தங்க நகைகளை எடுத்துச் சென்ற பின்னர், அவற்றுக்குப் பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், வங்கியில் வாடிக்கையாளர்களின் அடமான நகைகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தோன்றிய நிலையில், உண்மையானநகைகள்வேறு இடங்களில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் சுமார் 2,179 கிராம் தங்க நகைகள் இவ்வாறு முறைகேடு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் வங்கிக்கு ரூ.3.09 கோடி அளவுக்கு பண இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டில் பணம்?
போலீசார் நடத்திய விசாரணையில், திருடிச் சென்ற தங்க நகைகளை முரளி கிருஷ்ணா வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சொந்த செலவுகளுக்காகபயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கி மேலாளர் தினேஷ்குமார், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
உதவி மேலாளர் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளின் வழிகாட்டுதலில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொட்னூரு முரளி கிருஷ்ணா, (வயது 34) கைது செய்யப்பட்டார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர் தற்போது புரசைவாக்கம் பகுதியில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆகஸ்ட் 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட முரளி கிருஷ்ணாநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனிடையே, முரளி கிருஷ்ணா வேறு இடங்களில் அடமானம் வைத்ததாகக் கூறப்படும் தங்க நகைகளை மீட்கும் பணிகளையும் போலீசார் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சுமார் ரூ.3.09 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கூடிய சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதுபோன்ற தொடர் மோசடி சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறிதான கேள்விகளையும் எழுப்பி வருகிறது.



