தென்னிந்தியத் திரைப்பட உலகின் மூத்த நடிகை சவுகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடாப் சாலையில் வசித்து வந்த அவர், வயது மூப்பு மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாகப் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை இரவு அவருடைய உடல்நிலை திடீரென மோசமானதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று பிற்பகல் காலமானார். அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து அவர் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சவுகார் ஜானகியின் மறைவு தென்னிந்திய திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சங்கரமஞ்சி ஜானகி: சவுகார் ஜானகியின் இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த வெங்கோஜி ராவ் மற்றும் சச்சி தேவி தம்பதியின் மூத்த மகள் இவர். தந்தையின் தொழில் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னையில் வசித்தபோது, குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார். நாடகத்தில் ஜானகியின் குரலைக் கேட்ட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அவரை அழைத்தார்.
அதைக் கேட்டதும் அவர் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதெல்லாம் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சினிமாவில் நடிப்பது நினைத்து பார்க்க முடியாத விஷயம். எனவே வாய்ப்பை பெற்றோர் மறுத்துவிட்டனர். பின்னர் உறவினரான சீனிவாச ராவ் என்பவருக்கு அவரை 1947-ம் ஆண்டு மணமுடித்து வைத்தனர்.
அப்போது ஜானகிக்கு வயது 15. கணவருடன் விஜயவாடாவில் வசித்தார். குழந்தைக்குத் தாயாகி விட்ட பின்னர். குடும்பச்சூழல் காரணமாக வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஜானகி.
முதன்முறையாக திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு தருவதாகச் சொன்ன தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சென்னையில் சந்தித்தார். அவர், தன் தம்பி நாகிரெட்டியிடம் சிபாரிசு செய்தார். அவர் என்.டி. ராமராவ் நாயகனாக நடித்த ‘சவுகார்’ என்ற தெலுங்குப் படத்தை தயாரித்தார்.
எல்.வி.பிரசாத் இயக்கிய அந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜானகி. அந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது. நீண்டநாட்கள் திரையரங்குகளில் ஓடிய அப்படம், ‘பக்கத்து வீட்டுப் பெண்’ இமேஜை அவருக்கு கொடுத்தது. இதைத் தொடர்ந்து, அப் படத்தின் பெயரான ‘சவுகார்’ என்ற அடைமொழி அவருடன் இணைந்து ‘சவுகார் ஜானகி’ ஆனார்.
பின்னர், 1952-ம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஆந்திராவில் வளர்ந்த பெண் என்றாலும் இந்தப் படத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் வசனங்களை சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டு திரையில் அசத்தினார். வசன உச்சரிப்புக்காக ரசிகர்களின் கைதட்டல்களையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான படங்களில், ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’, ‘பணம் படுத்தும் பாடு’, ‘பாமா விஜயம்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘மகாகவி காளிதாஸ்’, ‘எதிர்நீச்சல்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘இரு கோடுகள்’, ‘காவியத் தலைவி’, ‘ரங்க ராட்டினம்’, ‘தில்லு முல்லு’, ‘வெற்றி விழா’ உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இதில் ‘காவியத் தலைவி’, ‘ரங்க ராட்டினம்’ ஆகிய படங்களை அவர் தயாரித்து நடித்தார். எந்த மொழி என்றாலும் அவரே டப்பிங் பேசுவது அவருடைய சிறப்பு. நாகேஸ்வர ராவ், என்.டி.ராமராவ், ஜக்கையா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்பட அப்போதைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘ஒளிவிளக்கு’ திரைப்படத்தில் எம்ஜிஆர் உடல்நலம் பெற வேண்டி ‘ஆண்டவனே உன் பாதங்களை…’ என்ற பாடலை இவர் பாடி இறைவனை வேண்டுவதாக காட்சி அமைந்திருந்தது. பின்னாளில் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அவர் விரைவில் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.



