மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காசா மீதான போர் நடவடிக்கைகள், பாலஸ்தீனிய மக்களின் பாதுகாப்பு மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தேர்தலில் முக்கிய விவாதங்களாக மாறியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், இஸ்ரேலில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் மட்டுமின்றி, காசா போர் மற்றும் பாலஸ்தீனியர்களின் நிலை குறித்த விவாதங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. லிகுட்உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் பெரும்பாலானவை வலதுசாரி சிந்தனையைக் கொண்டவையாக உள்ளன. இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தல், இஸ்ரேலின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் தொடர்ந்து போர் நடவடிக்கைகளிலும், எல்லைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காசாவில் பாலஸ்தீனிய குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் உலக நாடுகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவையில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக உள்ள இட்டாமர் பென்-க்விரின் கருத்துகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்தி வரும் பென்-க்விர், தினமும் இரவு 30 முதல் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.
அவரது இந்தக் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பென்-க்விரின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க தூதர் எதிர்ப்பு
இதற்கிடையே, மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மற்றும் அதன் பெயரில் பாலஸ்தீனிய மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான சில வன்முறை நடவடிக்கைகள் பயங்கரவாத செயல்களுக்குள் அடங்கும் என அவர் கூறியுள்ளார். இஸ்ரேலுடன் அமெரிக்கா நெருக்கமான உறவைப் பேணி வரும் நிலையில், அமெரிக்க தூதரின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம் இஸ்ரேலில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மறுபுறம் காசா மற்றும் மேற்குக் கரையில் தொடரும் வன்முறைகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், நெதன்யாகு அரசின் போர் கொள்கை மற்றும் பாலஸ்தீனியர்களை அணுகும் விதம் வரவிருக்கும் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.



