கொழும்பு வைத்தியசாலை பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! விடுக்கப்படும் எச்சரிக்கை..

 

கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது.

இருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் குறித்த இடம் போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறுவிடுகின்றது. இக்கழிப்பறை கொழும்பு மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டாலும் இரவு வேளையில் எந்தவொரு வெளிச்சமும் இருப்பதில்லை.

போதைக்கு அடிமையானவர்களின் ஆதிக்கம்

இரவில் இந்த இருள் சூழ்ந்த பாதையால் பயணிக்கும் ஒரு அப்பாவி மனிதன் தன் ஆடை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கூர்மையான ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துதல், பணம் பறித்தல், தாக்குதல் நடத்துதல் ஆகியவை இவ்விடத்தில் தினமும் நடைபெறும் சம்பவங்களாகும்.

கடைகளுக்கு வரும் மனிதர்களை பயமுறித்து கப்பம் பெறுதல் மற்றும் வைத்தியசாலையில் வேலை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

குறித்த பகுதிகளில் வியாபாரம் செய்யும் பெண்மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ரூ. 400 – 500 ஐப் பறிக்கிறார்கள். ‘இந்தக் கடைப் பக்கத்தில் எங்கும் நிற்காதீர் உன்னை வெட்டிவிடுவேன்’ என்று ரூ. 400 – 500 ஐப் பறிக்கிறார்கள்.

இங்கிருக்கும் ‘பாபா’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் அதிகாரி போல் நடித்துக் கப்பம் பெறுவதும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

அதுமட்டுமன்றி தேசிய வைத்தியசாலையைச் சுற்றி நடக்கும் மாபெரும் மோசடி என்னவென்றால் தானத்திற்கு எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரிப்பதாகும்.

இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் நேரடியாகவே போதைப்பொருள் வாங்குவதற்குச் செல்கிறது. நாளாந்த வருமானம் 10,000 ரூபாவையும் மிஞ்சுவதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு மோசடியாகப் பணம் சேகரித்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல வருடங்களாகத்தான் இதைச் செய்து வருகிறார்கள்.

மேலும் வைத்திசாலையின் பொலிஸ் காவலரணில் அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தமது கடமையை முறறையாகச் செய்தபோதிலும் தேசிய வைத்தியசாலை சூழலின் பாதுகாப்புத் தொடர்பாகப் பெரும் கேள்விக்குறியான சூழ்நிலையே நிலவுகிறது.

இது குறித்து விரைவான தீர்வை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.