சர்வதேச அலைச்சறுக்கு போட்டி.. 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

 

மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய போட்டிகள் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகின்றன. இப்போட்டி 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.இந்திய அரசியல்

போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் கூறுகையில், “நான் கடந்த 8 ஆண்டுகளாக அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இது எனது இரண்டாவது உலக அளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி தரவரிசையில் முன்னேறினால், அடுத்தடுத்த கட்டங்களுக்கு தகுதி பெற முடியும். அதன் மூலம் நாட்டின் சார்பில் பெரிய அளவிலான சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

இந்தியாவின் சார்பில் 12 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களில் 8க்கும் மேற்பட்டோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ள இந்த சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.