!
கொலம்பியாவின் மேற்கே ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 570 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவின் மேற்கே சான் ஜோஸ் டெல் பால்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் அமைந்திருந்ததுடன், பொகோட்டாவிலும் இதன் அதிர்வு கடுமையாக உணரப்பட்டது.
இதனால் அங்கு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புக் கருதி வீதிகளுக்கு வெளியேறி தஞ்சமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், காலி நகரில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவுக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு தேசிய பேரிடரைப் பிரகடனப்படுத்தி, அப்பகுதியில் ராணுவ வீரர்களைக் களமிறக்கியுள்ளது.
இதனிடையே, கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிர உதவிகளை வழங்கி வருகிறது’ என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொலம்பியாவுக்கு சுற்றுலா செல்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. தலைநகர் போகோடா (Bogota) உட்பட நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் இந்த நிலநடுக்கத்தின் அதிரவைக்கும் அதிர்வுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு வீதிகளுக்குப் பதறியடித்து ஓடிவந்தனர்.
நிலநடுக்கவியல் மையத்தின் முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் ஆழமான பகுதியில் மையம் கொண்டிருந்தது. தலைநகர் போகோடா மட்டுமன்றி மெடலின், காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் உயர்மட்டக் கட்டடங்கள் பல விநாடிகளுக்கு உலுக்கப்பட்டன. அதிர்வுகளின் தீவிரத்தால் நகரின் பல பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பேரழிவு மேலாண்மை அமைப்புகள் மற்றும் உள்ளூர் அவசரக்கால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டு நிலவரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகப் போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் சில பகுதிகளில் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டடச் சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் குறித்த விவரங்களை மீட்புக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.
நிலநடுக்கப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான திறந்தவெளிகளில் தங்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்தடுத்து நில அதிர்வுகள் (Aftershocks) ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அமைதி காக்குமாறும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் கொலம்பியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



