முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த போது, அதிகாலை வேளையில் வீட்டிற்குள் புகுந்த குழுவொன்று தந்தையினதும் தாயினதும் தலையில் பலமாகத் தாக்கியுள்ளது.
இதன்போது மகள் கூச்சலிட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் இருவரையும் மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலையைச் செய்தவர்கள் யார், எந்தக் காரணத்திற்காக இச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ள மாங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.



