3 நிமிடங்கள் இருளில் பறக்கும் விமானிகள்! சூரிய கிரகணத்தைத் துரத்தும் !

 

ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிகழவுள்ள அரிய முழுச் சூரிய கிரகணத்தைக் (Total Solar Eclipse) ஆய்வு செய்வதற்காக, நாசா அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி விமானிகள் இருவர் பூமியில் இருந்து சுமார் 50,000 அடி உயரத்தில் விண்வெளி எல்லைப் பகுதியில் பறந்து கிரகண நிழலைப் பின்தொடர உள்ளனர். சாதாரண மக்களுக்குப் பூமியில் முழுச் சூரிய கிரகண இருள் 2 நிமிடங்கள் 18 வினாடிகள் மட்டுமே நீடிக்கும் நிலையில், இந்த விமானிகளுக்குக் கூடுதல் 42 வினாடிகள் சேர்க்கப்பட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை சூரிய கிரகண இருள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் கெஃப்லாவிக் விமான நிலையத்திலிருந்து நாசாவின் WB-57 ரக அதிநவீன ஆராய்ச்சி விமானத்தில் புறப்படும் இந்த விமானிகள், கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து கடல் எல்லைகளுக்கு இடையே உள்ள வளிமண்டலத்தின் ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் பயணிக்க உள்ளனர். மணிக்கு 2,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி விரைந்து வரும் சந்திரனின் ‘அடர்ந்த விசித்திர நிழல்’ (Eerie Shadow) ஜெட் விமானத்தின் மீது பாயும் போது, விமானத்தின் காக்பிட் பகுதி சட்டென இருண்டு குளிர்ந்த சூழலுக்கு மாறும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் கூர்மையான முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 4 அதிநவீன அகச்சிவப்பு கேமராக்கள் மூலம், சூரியனின் வெளிமண்டலமான ‘கொரோனா’ (Corona) பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் வினாடிக்கு 20 படங்களாகப் பதிவு செய்யப்பட உள்ளன. சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் அதன் வெளிப்புற வளிமண்டலம் மில்லியன் கணக்கிலான டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருப்பதற்கான பின்னணி மற்றும் சூரியனில் நிகழும் ‘நானோ ஃபிளேர்ஸ்’ எனப்படும் காந்த வெடிப்புகளை ஆராய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

மேகங்கள் மற்றும் வளிமண்டல தூசி அடுக்கிற்கு மேலே 50,000 அடி உயரத்தில் பயணிப்பதால், தடையற்ற முறையில் சூரிய கிரகணத் தரவுகளைச் சேகரிக்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. ஐரோப்பா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தெளிவாகத் தெரியவுள்ள இந்த முழுச் சூரிய கிரகணத்தை வானியல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.