இலங்கை சிறைகளில் மோதல்; 3 கைதிகள் பலி: 26 பேர் காயம்

 

இலங்கையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து சிறைச்சாலைகளில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தபடி உள்ளது. கொழும்புவுக்கு அருகே உள்ள குருவிட்ட சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போதைப்பொருள் அடங்கிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டதும், அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த மோதல் உருவானது.

அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 2 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டார். 11 பேர் காயமடைந்தனர். ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு இரு சிறைகளிலும் மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.