1945 ஆகஸ்ட் 6 உலகம் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக இன்று வரை பார்க்கப்படுகிறது. அன்று உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா வீசியது. அடுத்து 3 நாட்களில்,அதாவது ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீதும் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. அந்த பேரழிவின் வடுக்களை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் ஜப்பான், ஹிரோஷிமா தாக்குதலின் 81-வது நினைவு நாளை இன்று அனுசரிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் தாக்கியதற்குப் பதிலடி கொடுக்கவே அமெரிக்கா இந்த கொடூர முடிவை எடுத்தது. ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
ஹிரோஷிமா, கோகுரா, நாகசாகி ஆகிய மூன்று நகரங்கள் இலக்காகக் குறிவைக்கப்பட்டன. ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு லிட்டில் பாய் ‘ என்ற அணுகுண்டைச் சுமந்து கொண்டு ‘எனோலா கே’ என்ற பி-29 ரக போர் விமானம் புறப்பட்டது.
அன்று அந்த குண்டு வீசப்பட்ட நொடியில், மனித குலம் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய பேரழிவை ஹிரோஷிமா சந்தித்தது. பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய அந்தத் தாக்குதலின் ரணங்கள், தலைமுறை கடந்தும் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இந்த சோக நிகழ்வின் 81-வது நினைவு தினம், ஜப்பானில் உள்ள அமைதிப் பூங்காவில் இன்று உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் அமெரிக்கா, ஈரான் உட்பட 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சரியாக காலை 8:15 மணிக்கு அணுகுண்டு வீசப்பட்ட நேரம் என்பதால் அமைதி மணி ஒலிக்கப்பட்டு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர் கஸுமி மாட்சுயி போர் வெறியில் ஈடுபடும் வல்லரசு நாடுகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் பாதுகாப்பு என்ற பெயரில் அணுஆயுதங்களை வைதிருப்பத நியாயப்படுத்தக் கூடாது. நாடுகள் தங்களின் சுயலாபத்திற்காக வன்முறையில் ஈடுபடுவது மீண்டும் ஒரு ஹிரோஷிமா அல்லது நாகசாகி போன்ற பேரழிவிற்கே வழிவகுக்கும் என எச்சரித்தார். மேலும் ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி அணுஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க சாத்தியமான வழிகளில் செயல்படுவோம் என்று உறுதியளித்தார்.
இருப்பினும், தாகைச்சியின் புதிய அரசு ஜப்பானின் நீண்டகால “மூன்று அணுஆயுத எதிர்ப்புக் கொள்கைகளில்” மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு அணுஆயுதங்களை ஜப்பானுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற மூன்றாவது விதியை தளர்த்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜப்பான் தனது பழைய கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுமா என்பது குறித்து பிரதமர் தனது உரையில் தெளிவாகக் குறிப்பிடாதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஜப்பான், அணுஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வருகிறது.



