திருகோணமலையில் இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!இரு பெண்களை வெள்ளை வேனில் கடத்தி

 

திருகோணமலை பாலையூத்து பகுதியில் இரு பெண்களை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததன் பின்னர் கொலை செய்த குற்றச்சாட்டில் இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சமூகக் கொள்ளைத் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், சிஐடி யில் வைத்து கைது செய்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி திருகோணமலை பாலையூத்து பகுதியைச் சேர்ந்த சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெலிசியா ஆகிய இரு பெண்கள் வெள்ளை வேனில் வந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக திருகோணமலை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. எனினும் அது தொடர்பிலான எந்தவித விசாரணைகளும் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை.

னினும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று காணாமலாக்கிய விவகாரம் தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகளில், அலவ்வ பகுதியில் வைத்து கேகாலையைச் சேர்ந்த சாந்த எனும் நபரை கடத்திச் சென்றமை தொடர்பிலான குற்றம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது. அது தொடர்பில் விசாரணை செய்தபோது இரண்டு கடற்படை வீராங்கனைகள் கைது செய்யப்பட்டனர்.உள்ளூர் சுற்றுலா ஆராய்க

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு மேலதிகமாக பலரும் அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தமாலி மற்றும் காவோஸ் எனும் பெயர்களால் அறியப்படும் இரண்டு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் கன்சைட் வதை முகாமில் ஏராளமான தமிழ்ப் பெண்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் ஆறு பெண்கள் தொடர்பிலான விவரங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதலில் இரட்டைக் கொலையாக கருதப்படும் சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெலிசியா ஆகியோரின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘பி’ அறிக்கை பிரகாரம், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் கையேற்றது. அதன்படி, அந்த விவகாரத்தில் முதல் கைதாக இரு முன்னாள் கடற்படை பெண் வீராங்கனைகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் அவர்கள் இருவரும் கேகாலை சாந்தவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள பிணை நிபந்தனைகளின் பிரகாரம் கையெழுத்திடுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்தபோது, இந்த இரட்டைக் கொலை தொடர்பில் அவர்களைக் கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இரண்டு முன்னாள் கடற்படை வீராங்கனைகளையும் இன்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி வருகின்றனர்.