யுத்தத்தின் தோல்வியினால் அமெரிக்கா-புதிதாக-வகுக்கும்-திட்டம்

 

குழப்பத்துக்குள்ளாகி இருக்கும் உலக ஒழுங்கு மீளக் கட்டமைக்கப்படுவதற்காக அமெரிக்கா ஈரான் போர்; நீடிப்பதற்கான அடிப்படை காரணமாக தெரிகிறது.

சமாதானமும், பேச்சுவார்த்தையும், போரும் சமதளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போரின் விஸ்தரிப்பு படிப்படியாக நகரத் தொடங்கி இருக்கின்றது.

மீண்டும் இஸ்ரேலியப் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகுவை கொண்டுவருவதில் அமெரிக்கவாழ் யூதர்கள் அதிக கவனம் கொண்டுள்ளனர். அதற்கான நகர்வுகளே ஈரான்- அமெரிக்க போரில் கையாளப்படுகின்றன. அதன் ஓரங்கமே அமெரிக்க- சவூதி கூட்டாகும்.

அணுசக்தி உடன்படிக்கையில் சில நிபந்தனைகளை அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு முன்வைத்த போதும், நடைமுறையில் சவுதி அரேபியாவை மேற்காசிய பிராந்தியத்தில் ஈரானுக்கு இன்னொரு சவால் மிக்க அரசாக மாற்றுவதில் அமெரிக்கா கவனம் கொண்டுள்ளது. இதுவே அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டின் பிந்திய தந்திரோபாயமாக உள்ளது.

ஈரானின் நவீன தொழில்நுட்பத்தினால் இஸ்ரேலின் நிலப்பரப்பு வேகமாக அழிந்துவிடக் கூடிய இராணுவ வலிமை மேற்காசியாவில் வளர்ந்துள்ளது.

இதுவே சவூதி அரேபியாவை ஈரானுக்கு எதிராக தூண்டுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. வரலாற்று ஆதாரங்களின் பிரகாரம் சவூதி அரேபியாவின் ஆட்சியாளர்கள் யூத இன வழித் தோன்றல்கள் என்றும், யூதக்கலப்பு கொண்டவர்கள் என்றும் தகவல்கள் உள்ளன.

அதன் அடிப்படையில் மட்டுமன்றி சவூதி அரேபியாவின் அரசியல் புவியியலும் புவிசார் அரசியலும் மேற்காசியாவில் நிலைத்திருக்கக் கூடிய சக்தியாக உள்ளன. ஈரானுக்கு எதிரான அரசாக சவூதியை கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்காவும் ஈராக்கும், 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 48 பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 120 இற்கு மேற்பட்ட விடயங்களில் (ஜுலை 14, 2026) கையெழுத்திட்டன. இவற்றில் இராணுவப் பிரசன்னத்திலிருந்து வர்த்தகக் கூட்டாண்மைக்கான விடயங்கள் அடங்கும்.

மற்றும் செப்டம்பர் 30, 2026 இற்குள் அமெரிக்கப் படைகளை முழுமையாக ஈராக்கிலிருந்து திரும்பப் பெறுவதையும் மையமாகக் கொண்டதாக உடன்படிக்கை உள்ளது. குறிப்பாக எரிசக்தி கூட்டாண்மையின் கீழ் பெற்றோலிய உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எக்ஸான்மொபில், செவ்ரான், ஷெல், ஹாலிபர்டன் மற்றும் கே.பி’ஆர் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களில் ஒப்பந்தங்களை ஈராக் கையெழுத்திட்டுள்ளது.

குழாய்வழித் திட்டங்கள் கட்டமைக்கும் விதத்தில் ஹோர்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்து, ஈராக்கை சிரியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையுடன் இணைக்கும் மசகு எண்ணெய் குழாய்வழியைப் புனரமைத்து மேம்படுத்துவதற்காக செவ்ரான் நிறுவனம் ஈடுபட்டுள்ள திட்டங்களிலும் இரு நாடுகளும் செயல்படுவதென தீர்மானித்துள்ளன.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் அடிப்படையில் சுகாதாரம், மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கைக்கோள் இணையத்திற்காக நாடு தழுவிய சேவை ஒப்பந்தத்திலும் இருநாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி ஆகியோருக்கு இடையே ஜுலை 14, 2026 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, ​​மீதமுள்ள அனைத்து அமெரிக்கப் படைகளும் செப்டம்பர் 30, 2026 இற்குள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கான பரஸ்பர ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கா- ஈராக் உடன்படிக்கையின் பின்னணி இஸ்லாமிய சமூகங்களிடம் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஷியா- சுன்னி முஸ்லிம்கள் பிரிவினையின் அடிப்படையிலான தோற்றப்பாடாக காணப்படுகிறது. ஆட்சியில் இருக்கும் ஈராக்கிய சுன்னிக்களுக்கு எதிராக போராடும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையில் நிகழும் முரண்பாட்டை அமெரிக்கா சரியாகவே பயன்படுத்திக் கொள்ள உடன்படிக்கையை நகர்த்தியது.

ஈரானோடு நேரடி போர் தோல்விகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழலில் சவூதி, ஈராக் போன்ற அரசுகளை தமது இலக்குக்கேற்ற வகையில் கட்டமைத்து போரை சாதகமாக்கவும் அதன் மூலம் அமெரிக்கா வல்லரசு என்பதை நிலைநிறுத்தவும் அந்நாடு திட்டமிடுகிறது.

மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கான தடைச்சுவராக சவூதி அரேபியாவையும் ஈராக்கையும் உடனடியாக பயன்படுத்த அமெரிக்க- இஸ்ரேலியக் கூட்டு தொடங்கியுள்ளது.

இரண்டாவது சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு முஸ்லிம் பிரிவுகளுக்கு எதிராக நிகழ்த்திய போர் ஏறக்குறைய கூட்டுத் தாக்குதலுக்கான திட்டமிடலாக மாற்றப்படுவதையே இது காட்டுகிறது.

ஈரான் மேற்காசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு சவூதி, குவைத், கட்டார் போன்ற நாடுகள் அமெரிக்க இராணுவத்தோடு இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டமை முதல் கட்டமாக காணப்பட்டது.

தற்போது சவூதியையும் அதன் இராணுவத்தையும் பயன்படுத்திக் கொண்டு தாக்குதலை தொடங்கியிருப்பது இரண்டாவது மிகப் பிரதான கட்டமாகத் தெரிகின்றது. எனவே மேற்காசிய பிராந்தியத்தை யுத்தபூமியாக மாற்றுவதில் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு கவனம் கொள்கிறது. இது ஈரானுடைய இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவது என்பதற்கு அப்பால், மேற்காசியாவின் வளங்களும் மேற்காசியாவின் அராபிய தேசியவாதமும் காணாமல் செய்யப்படுவதற்கான அணுகுமுறையாக தெரிகின்றது.

அத்துடன் மிக நீண்ட விடுதலை உணர்வை தாங்கிக் கொண்ட ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தும் குர்திஷ் விடுதலைப் போராட்ட அமைப்பை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்திக் கொண்டு ஈரான் மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளன.

அத்தகைய தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும் அதற்கான முனைப்புகளும் ஒத்துழைப்புக்களும் மேற்காசியப் பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கையின் விரிவாக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. கொள்கையற்ற விடுதலைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு விலைபோவதும் இலக்கை அடைய முடியாதிருப்பதும் குர்திஷின் கதியாகிப் போயுள்ளது.

எனவே அமெரிக்கா தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டு வெற்றி பெற முயலுகிறது. இது இஸ்ரேலிய உபாயமாகவே தெரிகிறது. போரில் பாரிய அழிவுகளை ஈரான் எதிர்கொண்டாலும், அமெரிக்காவும் அதற்கு நிகரான போர் இழப்புகளை சந்தித்துள்ளது. பாரிய போர் விமானங்களை, கடற்படைக் கப்பல்களை, இராணுவ வீரர்களை, மேற்காசியாவிலுள்ள இராணுவத் தளங்களை இழந்துள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் அமெரிக்காவின் பொருளாதார இழப்புகள் பாரிய சவாலை அமெரிக்காவுக்குள்ளே ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும் இப்போரில் வெற்றி பெற தவறுமாக இருந்தால் அமெரிக்காவின் வல்லரசு காலாவதியாகும். அது இஸ்ரேலைப் பாதிக்கும்.

அதனால் இப்போரை வெற்றி கொள்வதில் இன்னும் முயன்று கொண்டே உள்ளது அமெரிக்கா.