17 வயது மகனை கொன்ற தந்தை

 

 

59 வயதுடைய ஒருவர், தனது 17 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். மனைவி விவாகரத்து கோரியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மனநிலைச் சிதைவே இந்தச் செயலுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து, 59 வயதான அந்த நபர் தனது மகனை வீட்டிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக நைஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் (Parquet de Nice) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போது காவல் விசாரணையில் உள்ள அவர், கொலைக்கான நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்காக வியாழக்கிழமை அரசு வழக்கறிஞர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 

அவரை விசாரணைக் காவலில் (தற்காலிக சிறை) வைக்குமாறு அரசு தரப்பு கோர உள்ளது.

தொழிலில் மருத்துவமனையில் உதவி செவிலியராக (Aide-soignant) பணியாற்றும் இவர், திங்கள்கிழமை பிற்பகலில் காவல்துறையைத் தொடர்புகொண்டு, “என் மகனை நான் கொன்றுவிட்டேன்; இப்போது நானும் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

 

சில நிமிடங்களுக்குப் பிறகு, தன்னையும் தனது மகனையும் சடலப் பைகளில் (body bags) வைத்திருக்கும் இரண்டு புகைப்படங்களை தனது மனைவிக்கும் மாமனார், மாமியாருக்கும் அனுப்பியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் வீட்டுக்குச் சென்றபோது, மருத்துவமனையில் இருந்து எடுத்துவந்ததாக அவர் கூறிய அந்த சடலப் பைகளில், 17 வயது சிறுவனின் உயிரற்ற உடலையும், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காயமடைந்த தந்தையையும் கண்டுபிடித்தனர்.

 

ஆரம்ப மருத்துவப் பரிசோதனைகளின்படி, அந்த இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டதன் விளைவாக உயிரிழந்திருக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பின்னர் காவல் விசாரணையில் ஆஜரான தந்தை, முதலில் தனது மகனின் முகத்தில் தலையணையை அழுத்தி மூச்சுத்திணறச் செய்ய முயன்றதாகவும், பின்னர் இஸ்திரி (Iron) மின்கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்ததாகவும் கூறியுள்ளார்.

 

அதன்பிறகு, மகனின் உடலை ஒரு சடலப் பையில் வைத்து, தானும் மற்றொரு சடலப் பைக்குள் சென்று தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார்.

 

சம்பவம் நடந்த அன்று காலை, தனது மனைவி இனி வீட்டிற்கு திரும்பமாட்டார் என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட “ஒரு கண நேர மனநிலைச் சிதைவில்” இந்தச் செயலைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், தனது மனைவி தொடங்கியிருந்த விவாகரத்து நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையிலேயே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது கணவரின் குடும்ப வன்முறை மற்றும் தொடர்ச்சியான தொல்லை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறியிருந்த அந்த இளைஞரின் தாய், சனிக்கிழமை நைஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.