‘மாகாண சபைத் தேர்தல் அல்லது இலங்கை தேசிய இனப்பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவை மீண்டும் இழுத்து உள்ளே விடுவது, எமக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி நன்மை பயக்காது. வட-கிழக்கை இணைத்து, இந்தியாவால் தர முடிந்த மாகாண சபையை, முதல் கட்ட தீர்வாகப் பெற்று, தம்மை திடப்படுத்திக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வரலாறு தந்த வாய்ப்பை, தமிழ்த் தேசியக் கட்சிகள் தவற விட்டு விட்டன. ஆகவே, இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரலாறு நம்மை கொண்டு வந்து விட்டுள்ளது. இந்திய அரசு, இனிமேல் இலங்கை தமிழர் தரப்பின் பங்காளியாக, இலங்கை தேசிய இன பிரச்சினையில் தலையிடாது, செயற்படாது என்பது எனக்கு நன்கு விளங்குகிறது’ என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
‘13ஆவது திருத்தச்சட்டம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே, அதனைத் தக்க வைத்து கொள்வதா, மேம்படுத்துவதா, முழுமையாக நடைமுறைப்படுத்துவதா, சீர்திருத்துவதா அல்லது முற்றிலும் நீக்குவதா என்பதை தீர்மானிப்பது இலங்கையர்களின் பொறுப்பாகும். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது உறவை சரியான முறையிலும், சரியான நேரத்திலும் பயன்படுத்தத் தவறிவிட்டன. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கொண்டிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, இணக்கமான அரசியல் தீர்வை முன்னெடுக்க அவர்கள் போதுமான முயற்சி எடுக்கவில்லை. அதேபோல், மாகாண சபை அமைப்பை பயன்படுத்தி தங்களது நிலையை முதலில் வலுப்படுத்திக் கொண்டு, பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும், இந்தியாவினது நம்பிக்கையை பெறவும், அவர்கள் திறம்பட செயற்படவில்லை’ என்றும் மனோ கணேசன் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டை தற்போது வெளிப்படுத்தியிருக்கின்றார்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பானது அன்னை இந்திராகாந்தியின் காலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அன்னை இந்திராகாந்தியின் காலத்தில் தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சிகளை வழங்கியதுடன் போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டிருந்தது. அன்று தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் உட்பட தமிழகத் தலைவர்களும் தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
தமிழர்களது போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அன்று மத்திய அரசாங்கம் செயற்பட்டமைக்கு இலங்கை அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு போக்கு உட்பட பல்வேறுபட்ட காரணங்களை கூற முடியும். ஆனாலும், தமிழர்களின் போராட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிய இந்தியா, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் அக்கறை காட்டியிருந்தது. இதன் காரணமாகவே திம்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்துதான் 1987ஆம் ஆண்டு இலங்கை– இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் மூலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது. அன்று இந்த மாகாண சபை முறைமையை விடுதலைப் புலிகள் ஏற்றிக்கொண்டிருக்கவில்லை. இந்திய மத்திய அரசாங்கம் அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தே இதற்கான சம்மதத்தை பெற்றிருந்தது.
ஆனாலும் மாகாண சபை முறைமை ஊடான அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு போதியதாக இல்லை என்ற நிலைப்பாட்டை அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு இந்த விடயம் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.
அன்றைய காலப் பகுதியில் இலங்கை வந்திருந்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் உருவானதையடுத்து இந்த மாகாண சபை முறைமையின் அமுலாக்கம் என்பது உரிய வகையில் சாத்தியப்படவில்லை. அன்று விடுதலைப் புலிகள் இந்திய அமைதிகாக்கும் படையினருடன் முரண்பட்டதையடுத்தே மாகாண சபை முறைமையை உரிய வகையில் அமுல்படுத்த முடியாத நிலை உருவாகியிருந்தது.
தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி அன்று மாகாண சபை முறைமைக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருந்தது. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியும் வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் முரண்பட்ட போக்கும் மாகாண சபை முறைமையை அமுல்படுத்துவதில் அன்று தாக்கம் செலுத்தியிருந்தன.
அன்று, விடுதலைப் புலிகளின் போக்குக்குக் எதிராக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் செயற்பட முடியாத நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாகவே 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலை தமிழ் மிதவாத கட்சிகளுக்கு ஏற்பட்டிருந்தது. இந்த யதார்த்தத்தை அன்று அனைவரும் புரிந்துகொண்டிருந்தனர்.
உண்மையிலேயே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா பெரும் பங்களிப்பு செய்திருந்தது. அவ்வாறு மாகாண சபை முறைமையை அமுல்படுத்திய இந்தியா, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை உரிய வகையில் கொடுக்க வேண்டும் என்றே தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தற்போதும் கோரி வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட்ட இந்தியத் தலைவர்களை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறே கோரி வருகின்றனர்.
இந்தியத் தலைவர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்த பின்னர் 13ஆவது திருத்தம் என்பதை வெளிப்படையாகக் கூறாமல் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று மறைமுகமாக தெரிவித்து வருகின்றதை காணக்கூடியதாகவுள்ளது.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் அன்றுமுதல் பங்களிப்பு செய்த இந்தியா, இறுதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அவ்வாறு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒத்துழைப்பை வழங்கிய இந்தியா, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான தார்மீகக் கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதனைத்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு தேவையற்றது என்றும், அதற்கான சூழல் தற்போது இல்லை என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தற்போது கூறுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடாக தெரியவில்லை.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான். அந்தப் பொறுப்பு உருவாகக் காரணம் இலங்கையில் தமிழர் ஆயுதப் போராட்டத்தை செயலிழக்கச் செய்வதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளும் இராணுவத் தலையீடும் தீர்மானகரமான பங்குகளை வகித்ததுதான் என்று மனோ கணேசன் கூறியிருக்கின்றார். இதன் மூலம் அவர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவுக்கு தார்மீகக் கடமை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறார். எனவே, இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா தனது தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்பதை இந்தவேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.




