ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி – 21 பேர் படுகாயம்!

 

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ள இத்தாலிய உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட வெடிபொருள் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் படுகாயமடைந்தனர்.

மொஸ்கோ நகர மையப்பகுதியில் அமைந்துள்ள ‘பல்சி ரோசி’ என்ற உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 08:00 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தகவலின்படி, வெடிபொருட்களைச் சுமந்து வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு ஊழியரால் தடுக்கப்பட்டுள்ளார்.

அப்போது அந்த வெடிபொருள் வெடித்ததில், வெடிபொருளைக் கொண்டுவந்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்கு யார் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்தை ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மொஸ்கோவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.