முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ வாட் தொகுதியின் நிர்மாணப் பணிகள் புதன்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, குறித்த கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக மொத்தமாக 600 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய வாட் தொகுதி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றா நோய்கள் (NCD) காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதுடன், 35 வயதுக்கு மேற்பட்டவர்களை தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார சேவை வழங்கும் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான நிதியுதவியை வழங்கிய இந்தியப் பிரதமர் தலைமையிலான இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுகாதார அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.



