சிறைச்சாலைகளுக்குள் திட்டமிட்ட வகையில் மோதல்கள் உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டு, அது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கு எதிராக ஒரு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிறைச்சாலைக் கட்டமைப்பில் நெரிசல் காணப்படுகிறது. கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.இந்த பிரச்சினைகள் நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தோற்றம் பெற்றதல்ல, கடந்த காலங்களிலும் தொடர்ச்சியே இவை.
சிறைச்சாலையில் காணப்படும் நெரிசலை குறைப்பதற்கு திட்டமிட்ட வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.சிறைச்சாலைகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் அவர்களில் 30 ஆயிரம் பேர் வரையிலானோர் தடுப்புக்காவலில் உள்ளவர்களாவர், இவர்களில் 23 ஆயிரம் பேர் வரையிலானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்.
தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு விரைவாக பிணையளிப்பதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகளை விரைவுப்படுத்துவதற்குரிய வளங்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன.
100 கிராமிற்கும் குறைவான போதைப்பொருளுக்கு மேல் நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறைச்சாலைகளின் பௌதீக வளங்களை விரிவுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளுக்குள் திட்டமிட்ட வகையில் மோதல்கள் உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டு, அது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அதற்கு எதிராக ஒரு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
சிறைக்கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.



