சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக நடித்து, விமான பயணியிடம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க நெக்லஸை பறித்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் நந்தகோபால் (23). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் பெண்ணிடம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் நெக்லஸ் பார்சலை வாங்கிச் செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றிருந்தார்.
அந்த பெண் வந்ததும், பார்சலை பெற்றுகொண்டார். பின்னர், இருவரும் விமான நிலைய டெர்மினல்-1 போர்டிகோ பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த ஒரு நபர், தான் ஒரு சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி, அவர்களை மிரட்டி தங்க நகையை பறித்துச் சென்றார். இதுகுறித்து விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சுங்க அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து சென்னை விமான நிலைய போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தங்க நகையை பறித்துச் சென்ற நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ரேபிட்டோ ஓட்டுநர் இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் திருச்சியைச் சேர்ந்த சையது முஷ்ரப் (23) என்பவர் வழக்கறிஞர் ஒருவரோடு வந்து, சரண் அடைந்தார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சியைச் சேர்ந்த நான் சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் வசிக்கிறேன். சென்னை விமான நிலையத்தில் வாடகை கார்களுக்கு சவாரி பிடிக்கும் புரோக்கராக இருக்கிறேன். ரேபிட்டோ ஓட்டுகிறேன்.
சம்பவம் நடந்த அன்று ஒரு ஆணும், இளம்பெண் ஒருவரும், ஒரு கவரில் இருந்து தங்க நெக்லஸை எடுத்து பார்த்து பேசிக்கொண்டு நின்றனர். அதைப் பார்த்ததும் நான் அவர்களிடம் சென்று, சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து, அந்த நெக்லஸை பறித்துக் கொண்டு ஓடிவிட்டேன்.
போலீசார் என்னை தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், நானாக வந்து சரணடைந்து விட்டேன் என்று தெரிவித்து, தங்க நெக்லஸை ஒப்படைத்தார். இதையடுத்து, போலீசார் சையது முஷ்ரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



