அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2026 ஜூலை 31 ஆம் திகதி ஹமாஸ் மீது திணிக்கப்பட்ட 15 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸை நிராயுதபாணி ஆக்குவதற்கான ஓர் உடன்பாட்டை எட்டியதாக அறிவித்தார். அமெரிக்க--பிரித்தானிய மற்றும் அரபு சர்வாதிகாரிகள் துணையோடு பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப் படுகொலையை ஆதரித்த போர்க் குற்றவாளிளை உள்ளடக்கிய “சமாதான சபை” என்று ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த இலக்கை எட்டி உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் படிப்படியாக ஆயுதக் குறைப்பு, ஆட்சி மாற்றம் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தை மீளப் பெறுதல் என்பன அடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக முழு பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அழிவுகளை ஏற்படுத்திய பல யுத்தங்கள், படுகொலைகள் மற்றும் அழிவுகளுக்கு மூல காரணமாக விளங்கிய இஸ்ரேலை நிராயுதபாணி ஆக்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ட்ரம்ப்பின் வெட்கக்கேடான இந்த நடவடிக்கைகள் மீது அவருக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளார். “நான் பிரதமராக இருக்கும் வரை, காஸாவிலோ அல்லது யூதேயா மற்றும் சமாரியாவிலோ, மேற்குக் கரையிலோ பைபிளின் பெயரைப் பயன்படுத்தி ஒரு பலஸ்தீன அரசு நிறுவப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” என்று நெதன்யாஹு அறிவித்துள்ளார்.
பிரபல கட்டுரையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ், காஸாவுக்கான ட்ரம்ப்பின் சமாதானத் திட்டம் ஒரு கானல்நீர், அது ஒரு மாயாஜாலம் என்று வர்ணித்துள்ளார்.
காஸாவில் தற்போது யுத்த நிறுத்தம் இல்லை. நடைமுறையில் செயல்படும் ஒரு “சமாதான சபையும்” அங்கு இல்லை. பலஸ்தீன அரசை உருவாக்குவதற்கான திட்டங்கள் எதுவும் அங்கு இல்லை. இனப் படுகொலை அல்லது அதற்கான பொறிமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டங்கள் எதுவும் அங்கு இல்லை.
ட்ரம்பின் திட்டம் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்படவில்லை. இது பலஸ்தீனர்களுக்கு சமமான தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்படவில்லை. இது தற்போது நடைபெற்று வரும் பெரிய அளவிலான படுகொலைகளைத் தடுக்க வடிவமைக்கப்படவும் இல்லை. மாறாக சியோனிச கனவின் உச்ச கட்டமாக இஸ்ரேல் மேற்கொண்டு வந்த, பலஸ்தீனர்கள் மீதான அதன் இனப் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வரவும், தப்பிப்பிழைத்த பலஸ்தீன மக்களை, தங்கள் தாயகத்திலிருந்து மீண்டும் விரட்டவுமே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் காஸா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்,மேலும் எதிர்கால அரசின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று பலஸ்தீனர்கள் வலியுறுத்தும் பிராந்தியத்திலிருந்து இஸ்ரேல் முற்றாக பின்வாங்க வேண்டும். இவை நடந்தால் மட்டுமே ஆயுதங்களைக் களைவோம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
காஸாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் நிலைமை தற்போது மேலும் மோசமடைந்து, 2023 அக்டோபர் 7, முதல் இந்தப் பகுதியை ஒரு பலிபீடமாக மாற்றியுள்ளது.
அரபு சர்வாதிகாரிகள், சர்வதேச சமூகம் மற்றும் தங்களது சொந்த தலைமைகளால்,தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் பலஸ்தீன மக்களில் பலர் 75 ஆண்டுகளுக்கும் மேலான போர், துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து ஏதோ ஒரு வகையில் தப்பிப் பிழைத்து வாழுகின்றனர்.
தங்களுக்கு ஆதரவாக ஏராளமான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் இருந்த போதிலும், அந்த மக்கள் முன்னரை விட, தற்போது தங்கள் தாயகத்திலிருந்து இனரீதியாக துடைத்து எறிய முற்படும், ஒரு இனப்படுகொலை நடவடிக்கைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். ஒரு பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தால் அவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் எழுந்து நின்று போராடுவதை தவிர பலஸ்தீனர்களுக்கு வேறு தெரிவுகளும் இல்லாமல் இல்லை.
14 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை கொண்ட பலஸ்தீன மக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்துக்கும், புலம்பெயர்ந்த பலஸ்தீனர்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட பாதியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பலஸ்தீன மக்கள் அரசியல் வரை படத்திலிருந்து மறைந்துவிடவோ அல்லது அவர்களை மறைத்து விடவோ வாய்ப்பில்லை.
அவர்களின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பலஸ்தீனர்கள் தங்கள் தேசிய உரிமைகளை அடைவதற்கான சிறந்த வழி, இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான அந்த மக்களின் நீடித்த எதிர்ப்பே ஆகும். இந்த விடயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ள அவர்களுக்கான சர்வதேச ஒற்றுமை மற்றும் மக்கள் ஆதரவு என்பனவற்றிலிருந்து அவர்கள் பயனடைந்து கொள்ளலாம்.
இதற்கிடையில், பல ஆண்டுகளாக யசீர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை அமைப்பான, பி. எல். ஓ, ஓர் ஓரங்க நாடகமாக மாறி உள்ளது. பரந்த அளவிலான நிதி ஊழல், உறவினர்களுக்கான ஆதரவு, இஸ்ரேலையும், அதன் அமெரிக்க--ஐரோப்பிய ஆதரவாளர்கள் மற்றும் அரபு சர்வாதிகாரிகளையும் மகிழ்விக்க, பலஸ்தீன மக்களின் உரிமைகளில் சமரசம் செய்ததாக அரபாத் மீது பரவலாக குற்றச் சாட்டுக்கள் உள்ளன.
அரபாத் மற்றும் அவரது பி.எல்.ஓவின் நடவடிக்கைகளால் விரக்தியும் சோர்வும் அடைந்த, பலஸ்தீன மக்கள் மத்தியில் பரவலான மதிப்பை பெற்றிருந்த ஷேக் அஹமத் யாசின், 1987 டிசம்பரில் பலஸ்தீன சுதந்திர இயக்கமான ஹமாஸை நிறுவினார்.
இது முதல் இன்திபாதா (இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் பலஸ்தீன எழுச்சி) வெடித்த போது எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஒரு கிளையாகக் கருதப்பட்டது. அதன் பிரதான பாதை இஸ்ரேலுக்கு எதிரான வன்முறை கலந்த போராட்டம், பத்தா இயக்கத்துடனான அரசியல் போட்டி மற்றும் காஸா பகுதியின் ஆட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. கொள்ளையடிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் இருப்பதை அது வன்முறையோடு நிராகரிக்கின்றது.
ஒரு வருடம் கழித்து ஹமாஸ் தனது முதலாவது சாசனத்தை வெளியிட்டது. வரலாற்று சிறப்புமிக்க பலஸ்தீனத்தில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும், இஸ்ரேலை அழிப்பதற்கும் ஹமாஸ் அழைப்பு விடுத்தது.
பலஸ்தீனம் ஒரு இஸ்லாமிய தாயகம் என்றும், அதை ஒருபோதும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும், இஸ்ரேலிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்டு அந்தப் பகுதியை கட்டுப்படுத்த புனிதப் போரை நடத்துவது பலஸ்தீன முஸ்லிம்களின் மதக் கடமையாகும் என்றும் ஹமாஸ் சாசனம் வலியுறுத்திக் கூறியது.
இந்த நிலைப்பாடு ஹமாஸை, 1988 இல் இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை அங்கீகரித்திருந்த, பலஸ்தீன விடுதலை அமைப்புடன் மோதிக் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தது. ஹமாஸ்,
இஸ்ரேலிய வீரர்களுக்கு எதிரான தனது முதலாவது தாக்குதல்களை 1989 ஆம் ஆண்டில் நடத்தியது. இதன் விளைவாக இஸ்ரேல் ஹமாஸ் மீது ஒரு தற்காலிக ஒடுக்குமுறையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது ஹமாஸ் நிறுவுனர் ஷேக் அஹமத் யாசின் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
1990களில் ஒஸ்லோ உடன்படிக்கைகளையும் இஸ்ரேலுக்கும் மதச் சார்பற்ற பலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் (பி. எல். ஓ) இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் ஹமாஸ் எதிர்த்தது.
1993 – 2000 ஆண்டுகளுக்கும் இடையில் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் ஏராளமான உயர்மட்ட தற்கொலை குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியது. இதன் விளைவாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்தன.
2006 ஆம் ஆண்டில் பலஸ்தீன சட்டமன்ற சபைக்கான தேர்தலில் ஹமாஸ் பங்கேற்றது. இந்த் தேர்தலில் பத்தாஹ் இயக்கத்தை எதிர்த்து ஹமாஸ் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றது. ஹமாஸ் 2007 ஆம் ஆண்டில் காஸா பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. 2008 ஆம் ஆண்டில் அது இஸ்ரேலை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் அதற்கு இராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தது.
2012 முதல் 2021 வரை ஹமாஸும் இஸ்ரேலும் பல மோதல்களில் ஈடுபட்டன. “ஹமாஸ் இதுவரை நிறைய இராணுவ பின்னடைவுகளை சந்தித்து உள்ளது. இருந்தாலும் அது இன்னும் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும் ஆற்றலையும் திறனையும் கொண்டுள்ளது. மேலும் அது தனது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொண்டும் உள்ளது” என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் யுத்த ஆய்வுகள் துறையின் ஆராய்ச்சியாளரிடம் மெரினா மைரோன் என்பவர் கூறி உள்ளார்.
காஸாவின் குறுகிய கடலோரப் பகுதிக்குள், இஸ்ரேலிய படைகளால் தற்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ தெரிவுகளே உள்ளன. அதன் போராளிகள் நகரக் கூடிய புவியியல் எல்லைகள் குறுகியதாக உள்ளன. மேலும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இலத்திரனியல் கண்காணிப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலிய படைகளுடன் ஒரு பெரிய மோதலுக்கு தயாராகும் வாய்ப்பு இப்போது ஹமாஸுக்கு இல்லை. இருந்தாலும்
கூட, ஒரு அமைப்பாக, காஸாவுக்கு வெளியே உள்ள தலைவர்களுடனும், மேற்குக் கரை உட்பட ஏனைய பகுதிகள் முழுவதும் உள்ள ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு, ஹமாஸ் நீண்ட காலத்துக்கு இஸ்ரேலிய படைகளுக்கு தொல்லைகளை கொடுக்க முடியும்.
இஸ்ரேல் காஸா முழுவதையும் மீண்டும் ஆக்கிரமித்து, ஹமாஸின் செயற்பாடுகளுக்கு காரணமாக இருந்த எஞ்சியுள்ள சுரங்கங்களை அழிக்காத வரைக்கும் அதன் நிலை ஆபத்தானதே. பலஸ்தீன மாநிலத்தை அங்கீகரிக்கும் ஒரு சமாதான ஒப்பந்தத்தின் பின்னணியில், இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான விருப்பத்தை ஹமாஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது. ஓர் அரசியல் ஒப்பந்தம் மட்டுமே இதற்கான முன்னேற்றப் பாதையாக அமையலாம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசைத் தவிர, அனைத்து அரபு மற்றும் முஸ்லிம் பெரும் பான்மை நாடுகளும் பலஸ்தீன மக்களை முழுமையாக கைவிட்டு விட்டன. அரபுலக நாடுகள் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன அல்லது பலஸ்தீன விடயத்தில் வெறுமனே கண்மூடித்தனமாக உள்ளன.
காஸாவின் நிலைமை எப்படி முடிவடையும் என்பது தற்போது இடம்பெற்று வரும் ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணிக்கும் இடையிலான போரின் முடிவுகளையே பெரும்பாலும் சார்ந்திருக்கும். தெஹ்ரானும் அதன் நட்பு நாடுகளும் வெற்றி பெற்றால், ஒரு தீவிரமான தீர்வுக்கான நிலை உருவாகலாம் என்ற நம்பிக்கை உள்ளது.



