கறுப்பு ஜூலையின் கோரம்; தலைநகரில் தமிழர்களின் தொழிற்பேட்டைகள் சூறையாடப்பட்ட வரலாறு !

 

 

கருப்பு ஜூலை என்பது இலங்கையில் ஒரு கறைபடிந்த வரலாற்று பக்கமாகும். இதே திகதிகளில் தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்ககளில் அமைந்திருந்த தமிழ் தொழிலதிபர்களின் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்ககளை தீயிட்டு சூறையாடி பல ஆயிரக்கணக்கானவர்களை நடுத்தெருவில் நிறுத்திய வரலாற்றை மறக்க இயலாது.

அருளானந்தம் சாமுவேல் ஞானம் (ஞானம்) இவருக்கு சொந்தமான தொழிற்சாலைகள் சென்ட் அந்தோனிஸ் ஹார்டுவேர், சின்டெக்ஸ், ஏசியன் காட்டன் மில்ஸ், ஹென்ட்லி கார்மென்ட்ஸ்: மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் ஸ்டீல் காப்ரேசன் போன்ற நிறுவனங்கள்தான் இலங்கையில் நிறுவப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்ககளாகும், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்த நிறுவனங்களாகும். அவற்றில் வேலை செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள்தான் ஒரே நாளில் சூறையாடி தீயிட்டு அதற்கு முடிவு கட்டினார்கள் இனவாதிகள்.

கனகசபை குணரட்ணம் (கேஜி) தமிழ் தொழிலதிபரான கே. குணரத்தினத்திற்குச் சொந்தமான ‘ரெனால்ட்ஸ்’ (Reynolds) பேனாக்கள், புஜிபிலிம்’ (Fujifilm) பிளாஸ்டிக்” கதிரைகள், வாளிகள் போன்று உற்பத்திகள் , சினிமாஸ் லிமிட்டெட், பூஜி கிராபிக்ஸ், போட்டோ கினா லிமிட்டெட் சிலோன் லிமிட்டெட் அத்தனையும் அழித்தொழிக்கப்பட்டன. இலங்கையில் சிங்கள சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானவையாகும் சுமார் 40 சிங்கள படங்களை தயாரித்துள்ளார். வத்தளையில் அமைந்திருந்த அவருக்கு சொந்தமான திரைப்படங்களை எடுக்கும் விஜயா ஸ்டுடியோவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது சிங்கள திரைப்படங்களின் மூலப்பிரதிகள் அத்தனையும் சாம்பலாகின, அதைவிட பல தியேட்டர்களுக்கும் சொந்தக்காரர். 1989ஆம் ஆண்டு அவரையும் சுட்டுக்கொன்றார்கள் அதை ஜேவிபியினர்தான் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

மகாராஜா குழுமம் என்பது மிகப்பெரிய வலையமைப்பு அதன் தலைவர் கிளி மகேந்திரன் அவர்கள்தான் இலங்கை கிரிக்கற் சபைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தவர், கொழும்பில் உள்ள பேங்க்ஷால் வீதியில் அமைந்திருந்த தலைமை அலுவலகம், ரத்மலானாவில் இருந்த பல தொழிற்சாலைகள் மின்கலன் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள் அவர்களின் குடும்பத்தினரின் குடியிருப்புகள் ஆகியவை வன்முறைக் கும்பல்களால் முற்றிலுமாகச் அழித்தொழிக்கப்பட்டன.

இதைவிட இந்தியர்களுக்கு சொந்தமான ஹைத்ராமணி குழுமம் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களும் தீக்கரையாக்கப்பட்டன. மேலே சொல்லப்பட்டவை அத்தனையும் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை மட்டுமல்ல அவர்களுக்கு சொந்தமான மிகப்பெரும் நிறுவனங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி அழிக்கப்பட்டன அவற்றை கடந்து வந்துவிடுவோம் ஆனால் மறந்துவிட கூடாது.