ஜூலை 17-ஆம் தேதி அதிகாலையில், பென்டகன் ஈரானின் பாலங்கள், நீர் இறைக்கும் நிலையங்கள் ஒரு ரயில் நிலையம் ஆகியவற்றின் மீது குண்டுவீசியது; அதேவேளையில் ஈரான்ஷாஹரில் உள்ள பொதுமக்களுக்கான விமான நிலையம், ஈரானின் ஒரே ஆழ்கடல் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியது. ஜூன் 17-ஆம் தேதி கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் கிழித்தெறிந்ததைத் தொடர்ந்து, ஜூலை 11 முதல் மீண்டும் தொடங்கிய குண்டுவீச்சு நடவடிக்கைகளின் பகுதியாக, அமெரிக்க போர்விமானங்களும் ஏவுகணைகளும் ஒவ்வொரு இரவும் ஈரானைத் தாக்கி வருகின்றன.
6-2.jpg
மின் நிலையங்களையும் தகர்க்கிறோம்
இந்தத் தாக்குதல்கள், பல மாதங்களாக அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு வரைபடத்தைப் பின்பற்றி நடத்தப்படுகின்றன. ஜூலை 14 அன்று ஒளிபரப்பப்பட்ட ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) நேர்காணலில், ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் பாலங்களைத் தாக்குவதாக டிரம்ப் கூறினார். “அவர்களின் அனைத்து மின் நிலையங்களையும் நாங்கள் தகர்க்கப் போகிறோம்” என்று கூறிய அவர், பேச்சுவார்த்தை மேசையில் தெஹ்ரான் பணிந்து வராவிட்டால் ஈரானின் அனைத்து பாலங்களையும் அழித்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.
இது முன்னதாக விடுக்கப்பட்ட இன்னும் தீவிரமான கூற்றுகளை எதிரொலிக்கிறது: அதாவது, மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் போர் அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஈரானியப் படைகளுக்கு “எந்தவித கருணையும் காட்டப்படாது” (no quarter) என்று உறுதியளித்தார். “கருணை காட்டப்படாது” என்ற அறிவிப்பு சரணடையும் படைகள் கொல்லப்படும் என்பதையே குறிக்கும். இது ரோம் சட்டத்தின் (Rome Statute) கீழ் ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில், டிரம்ப் முழுமையான அழிவை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மிரட்டலை வெளியிட்டார்: “இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது.”
இந்தக் குண்டுவீச்சு நடவடிக்கைகள் அந்தத் திட்டத்தின்படியே அமைந்துள்ளன. ஈரானின் தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாண அதிகாரிகள் கூறுகையில், ஜாஸ்க் (Jask) துறைமுகத்திற்கு அருகிலுள்ள மின்சார வசதிகள், நீர் இறைக்கும் நிலையங்கள் ஆகியவற்றின் மீது அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதாகத் தெரிவித்தனர். புஞ்சி (Bunji) கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த கடல்நீர் இறைக்கும் நிலையம் மற்றும் மின்மாற்றி (transformer) ஆகியவை “முற்றிலும் அழிக்கப்பட்டன” என்று ஹோர்மோஸ்கான் நீர் மற்றும் கழிவுநீர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹம்ஸா பூர் (Hamzeh Pour) ’தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்; இதனால் 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மக்கள் குடிநீர் வசதியின்றி தவிக்கின்றனர். ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அப்பாஸை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பாதையில் உள்ள ‘கரிவே பாலம்’ (Gariveh Bridge) உள்பட, அப்பகுதியில் குறைந்தது ஆறு பாலங்கள் மீது அமெரிக்க ஏவுகணைகள் தாக்கின; இந்தப் பாதைகளைத் துண்டிப்பதே இத்தாக்குதல்களின் நோக்கமாக இருந்தது. பாலங்கள் மீதான தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது; அதேவேளையில், ஹோர்மோஸ்கான் ஆளுநர் அலுவலகம் அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு என்று கூறியது.
ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு ரயில் நிலையமும் தாக்கப்பட்டது. மேலும், ஈரான்ஷாஹரில் உள்ள பொதுமக்களுக்கான விமான நிலையத்தின் மீதும் அமெரிக்க ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. கடும் கோடை வெப்பத்தில் மின்சாரக் கட்டமைப்புக்கு அழுத்தம் ஏற்பட்டதால், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தெற்குப் பகுதி மக்களை ஈரானின் எரிசக்தி அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அஹ்வாஸில் உள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையமான ‘ஷாஹித் பாகாயி மருத்துவமனை’க்கு (Shahid Baqaei Hospital) அருகே நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலால், கீமோதெரபி சிகிச்சையில் இருந்த குழந்தைகள் உட்பட சுமார் 200 நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று ’அல் ஜசீரா’ செய்தி வெளியிட்டது. இத்தாக்குதலை “மிகவும் அப்பாவியான மனிதர்களுக்கு எதிரான கோழைத்தனமான போர்க்குற்றம்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) வர்ணித்தார்.
சபஹார் (Chabahar) துறைமுகத்தில், ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல் போக்குவரத்து மற்றும் மீனவர்களுக்கான மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வந்த 60 மீட்டர் உயரமுள்ள ‘கப்பல் போக்குவரத்து சேவை கோபுரத்தை’ (Vessel Traffic Service tower) அமெரிக்க ஏவுகணைகள் தகர்த்தன. புகை மண்டலத்திற்குள் அந்தக் கோபுரம் சரிந்து விழும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட ஹெக்ஸெத் (Hegseth), “ஈரான் இனி (350 மைல் தொலைவில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை) கட்டுப்படுத்துவதில்லை” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஜூலை 18 நிலவரப்படி, மீண்டும் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் முதல் 39 நாட்களில் சுமார் 3,500 ஈரானியர்கள் கொல்லப்பட்டனர்; அந்தப் போர் நடவடிக்கையின் பகுதியாக சுமார் 23,800 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மினாப் (Minab) நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுடன் தொடங்கிய அந்த நடவடிக்கையில், 168 பேர் கொல்லப்பட்டனர்; அவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.
இவை பொதுமக்களின் வாழ்வாதாரத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகும். இலட்சக்கணக்கான மக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான நீர், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது வாஷிங்டன் குண்டுவீசித் தகர்த்து வருகிறது. அன்றாட வாழ்க்கையைச் சாத்தியமற்றதாக்கி, ஈரானைச் சரணடைய வைப்பதே இதன் நோக்கமாகும். இது வெளிப்படையான போர்க்குற்றங்களை உள்ளடக்கிய நடவடிக்கையாகும்.
முற்றுகை, எண்ணெய்க் கப்பல்கள், படையெடுப்புத் திட்டங்கள்
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமான ஜூன் 17 ஒப்பந்தத்தை, வாஷிங்டன் ஜூலை 2 அன்று மீறியது. அன்று, ஒரு அமெரிக்கக் கடற்படைக் கப்பல் அணி ஹோர்முஸ் நீரிணையின் ஓமன் பக்கத்தைக் கைப்பற்றுவதற்காக நகர்ந்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் அந்த நீரிணையை மீண்டும் மூடியது, மேலும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஜூலை 6 அன்று தொடங்கின. ஜூலை 8 அன்று டிரம்ப் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலிழந்துவிட்டதாக அறிவித்தார். ஜூலை 10 அன்று இராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கும் என்று காங்கிரசுக்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) அறிவித்தார். மேலும் ஜூலை 11 அன்று குண்டுவீச்சு மீண்டும் தொடங்கியது. அமெரிக்காவின் மீறல்களால் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் “இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்று ஈரானின் பேச்சுவார்த்தையாளர்கள் கூறுகின்றனர் – ஆனால் தெஹ்ரான் அதைச் செயலிழந்துவிட்டதாகக் குறிப்பாக அறிவிக்கவில்லை.
டிரம்ப் ஜூலை 14 அன்று ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீண்டும் விதித்தார். முற்றுகை அமலுக்கு வந்த 17 மணி நேரத்திற்குள், இரண்டு வர்த்தகக் கப்பல்களை “திசை திருப்பியதாக” அமெரிக்க இராணுவம் கூறியது. ஜூலை 15 அன்று, கார்க் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த, குராகாவோ தீவின் (ஹாலந்தின் உடைமையிலுள்ள தீவு) கொடி ஏற்றப்பட்ட ‘பெல்மா’ என்ற எண்ணெய்க் கப்பலின் புகைபோக்கி மீது ஒரு அமெரிக்க விமானம் ஹெல்ஃபயர் ஏவுகணைகளைச் செலுத்தி, கடலில் இருந்த பயணிகள் கப்பலைச் செயலிழக்கச் செய்தது.
முந்தைய நாள் மாலையில் நடந்த வெள்ளை மாளிகையின் போர் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக வெள்ளை மாளிகையில் உள்ள தனி அறையில் (Situation Room) நடந்த கூட்டத்திற்குப் பிறகு, போரை விரிவுபடுத்தும் நோக்கில் டிரம்ப் சாய்வதாக ஜூலை 15 அன்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவையும், ஹரிகேன் நீரிணை நெடுகிலும் உள்ள பிற பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக அமெரிக்கத் தரைப்படைகளை அனுப்புவதும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.
மேலும் தற்போதைய குண்டுவீச்சை மேலும் பலவகைப்பட்ட தாக்குதல்களுக்கு களம் அமைப்பதற்கான “வடிவமைக்கும் நடவடிக்கைகள்” என அமெரிக்க அதிகாரிகள் விவரிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கட்டளைப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி, ஈரானிய மண்ணை துருப்பு கைப்பற்றி ஈரானிய அரசைப் பணிய வைக்கப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ் தொலைக்காட்சியில் வாதிட்டார்.
ஈரான் இதற்குப் பதிலடி தந்துள்ளது. ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், ஈரானியப் படைகள் இப்பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது போரின் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தின. ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் விமானத் தளத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாகப் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை கூறியது. குவைத்தில் உள்ள அல்-அதிரே முகாமில் உள்ள வெடிமருந்துக் கிடங்கு, அலி அல் சலேம் விமானத் தளத்தில் உள்ள வெடிமருந்து சேமிப்பு, கட்டடங்கள் , தகவல் தொடர்பு இணைப்புகள், பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படை ட்ரோன்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு, செயற்கை நுண்ணறிவு இலக்கு மையம் ஆகியவற்றின் மீதும் தங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இராணுவம் கூறியது. சவூதி அரேபியாவில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் ஒரு பாலிஸ்டிக் (ballistic missiles) ஏவுகணையையும் ஏவியதாக ஆக்சியோஸ் டிஜிடல் ஏட்டில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி ஓர் அமெரிக்க அதிகாரி கூறினார்.
ஜூலை 17 அன்று ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டு அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மூன்றாவது நபர் போரில் காணாமல் போனதாகவும் மத்தியக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் அல்-அஸ்ராக் தளத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. பென்டகன் ஒப்புக்கொண்ட இறப்பு எண்ணிக்கை இப்போது 16 ஆக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பிறகு ஜோர்டானில் நிகழ்ந்த இந்த மரணங்களே முதல் அமெரிக்கப் போர்க்கால மரணங்களாகும். உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். பென்டகனின் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்பதை ‘தி இன்டர்செப்ட்’ பல மாதங்களாக ஆவணப்படுத்தி வருகிறது. இதை ஒரு அமெரிக்க அரசாங்க அதிகாரி “உயிரிழப்புகளை மூடிமறைத்தல்” என்று குறிப்பிட்டார். அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் அறியப்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் விடுபட்டுள்ளன; ஒப்புக்கொள்ளப்பட்ட மரணங்களில் குறைந்தபட்சம் ஒன்றாவது பதிவேட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது; மேலும் காயமடைந்த 15 பேர் ஏப்ரல் மாதம் எந்த விளக்கமும் இன்றி அமைதியாக எண்ணிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஈரானியத் தாக்குதல்கள் குவைத்தில் உள்ள ஒருங்கிணைந்த மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சேதப்படுத்தியதால், அந்நாடு மின்சாரத்தைப் பங்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. ஜூலை 18 அதிகாலை வேளையில், குவைத் தனது வான்வெளியை மூடியதுடன், இரண்டு மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டதாகக் கூறியது. தாக்குதல்களால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பல குவைத் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். குவைத் தனது குடிநீரில் சுமார் 90 சதவீதத்தை கடல்நீரைக் குடிநீராக்குதல் மூலம் பெறுகிறது.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டிருப்பதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஜூலை 17 அன்று அறிவித்தது. ஈரானிய மின்சார உள்கட்டமைப்புகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்தால், பாப் எல்-மண்டேப் நீரிணியை மூடத் தயாராக இருக்குமாறு யேமனின் அன்சாரல்லா அமைப்பிடம் தெஹ்ரான் கேட்டுக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் அதன் சொந்த நிபந்தனைகளின்படியே பார்த்தாலும்கூட தோல்வியடைந்து வருகிறது. ஈரானிய அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. நீரிணையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் வாஷிங்டன் தோல்வியடைந்துவிட்டது. பென்டகன் அதன் செலவை பொதுமக்களிடமிருந்து மறைக்கிறது. ஜூன் 30 அன்று, பென்டகன் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, போரின் செலவு சுமார் 30 பில்லியன் டாலர்கள் என்று அமெரிக்காவின் ‘மேலாண்மை மற்றும் வரவு-செலவு திட்டத்துக்கான அலுவலக’த்தின் இயக்குநர் ரஸ்ஸல் வோட் காங்கிரஸிடம் கூறினார். NBC நியூஸ் வெளியிட்ட உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மதிப்பீடுகள், உண்மையான செலவு 80 பில்லியன் முதல் 100 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று குறிப்பிடுகின்றன. இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம், செலவழிக்கப்பட்ட வெடிமருந்துகளை மட்டுமே கணக்கிடுகிறது. ஈரானின் பதிலடித் தாக்குதலால் சேதமடைந்த அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான 30 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை இது உள்ளடக்கவில்லை. இதில் பஹ்ரைனில் சேதமடைந்துள்ள அமெரிக்கத் தளங்களைக் மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான 1 பில்லியன் டாலர்களும் அடங்கும்.
F-15E ஸ்ட்ரைக் ஈகிள்ஸ், ஒரு F-35, KC-135 எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள், MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் உட்பட 42 அமெரிக்க விமானங்கள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்று மே மாதத்தில் காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை அறிக்கை வெளியிட்டது. ஓர் அமெரிக்க அதிகாரியின் கூற்றுப்படி, ஜூலை மாதத்திற்குள், சேதமடைந்த ரீப்பர் ட்ரோன்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 30-ஐ எட்டியது. ஒவ்வொன்றின் மதிப்பும் தோராயமாக 30 மில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் சேதமடைந்த அமெரிக்க ட்ரோன்களின் மதிப்பு 1 பில்லியன் டாலரை நெருங்குகிறது.
4-11-1024×439.jpg
அமெரிக்காவின் இந்தப் போர், வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு ஈரானையும் நஞ்சாக்கி வருகிறது. ’காலநிலை மற்றும் சமூக நிறுவனத்’தின் ( The Climate and Community Institute) கணக்கிட்டபடி, குண்டுவீச்சின் முதல் 14 நாட்களில் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்பட்டன. தெஹ்ரானின் எண்ணெய் கிடங்குகள் மீதான மார்ச் மாதத் தாக்குதல், ஹைட்ரோகார்பன்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் கன உலோகங்கள் கலந்த கருப்பு மழையைத் தலைநகரின் மீது பொழியச் செய்தது. அந்த குண்டுவீச்சுத் தாக்குதல், கெஷ்ம் தீவில் உள்ள ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலையையும் அழித்தது. இதனால் 30 கிராமங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் 388 இடங்களில் நீர் விநியோக உள்கட்டமைப்புகளான நீரேற்று நிலையங்களும் நீர்த்தேக்கங்களும் சேதமடைந்துள்ளதாக ஈரானின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஈரானுக்கு “மிகவும் மோசமாக இருக்கும்” என்று டிரம்ப் அச்சுறுத்துகிறார், மீண்டும் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் இலக்குகளாகக் குறிப்பிடுகிறார். ஈரானை சரணடையச் செய்வதில் போர் தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்வதாகவே இந்த அச்சுறுத்தல் அமைந்துள்ளது. ஈரான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பொதுமக்கள் உயிர்வாழத் தேவையான நீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் மருத்துவ அமைப்புகள் மீது குண்டுவீசுவதன் மூலமும், ஒரு பரந்த படையெடுப்பிற்குத் தயாராவதன் மூலமும் வாஷிங்டன் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கிறது. ஒவ்வொரு புதிய தாக்குதலும் வாஷிங்டனின் போர்க்குற்றங்களின் பட்டியலை நீட்டிக்கச் செய்வதோடு, இப்பகுதியை ஒரு பெரிய போரை நோக்கி மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்கிறது.



