கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று 43 வருடங்கள் கடந்து விட்டன. தமிழ் மக்களை இலக்குவைத்து திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இந்த இனப்படுகொலையானது அன்றைய அரசாங்கத்தின் பின்னணியிலேயே இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து திட்டமிட்ட வகையில் ஜூலை கலவரம் அரங்கேற்றப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்களது சொத்துகளும் சூறையாடப்பட்டிருந்தன.
இந்த இனப்படுகொலையின் தாக்கம் நாட்டில் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்துக்கும் இதுவே வழிவகுத்திருந்தது.
தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக இலங்கை சுதந்திரந்திரமடைந்த காலத்திலிருந்து போராடி வருகின்றனர். தமிழ் மிதவாதத் தலைவர்கள் அன்று அஹிம்சா வழியில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்து இந்த அஹிம்சைப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. தெற்கின் அரசியல் தலைமைகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
தந்தை செல்வா காலத்தில் டட்லி – செல்வா ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம் என உடன்பாடுகள் காணப்பட்டன. ஆனால், அந்த உடன்பாடுகள் எவையும் நிறைவேற்றப்படாது கிழித்தெறியப்பட்டமையே வரலாறாக மாறியிருந்தது.
அன்று தமிழ் மிதவாதத் தலைவர்களின் அஹிம்சாவழி போராட்டங்களை தெற்கின் அரசியல் தலைமைகள் கணக்கில் எடுத்திருக்கவில்லை. இதனால்தான் தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமை உருவாக்கப்பட்டது.
1980களில் போராட்டத்துக்கான சூழல் உருவாக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரமானது தமிழ் இளைஞர்கள், யுவதிகளின் போராட்டத்துக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்திருந்தது. இதனால்தான், மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக நாடு பேரழிவுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அஹிம்சா வழியில் போராடும் நிலைமை தொடர்கின்றது.
மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கோ அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கோ தயாராக இல்லை. அன்று நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து அஹிம்சாவழி போராட்டம், பின்னர் ஆயுதப் போராட்டம், அதனைத் தொடர்ந்து மீண்டும் அஹிம்சாவழி போராட்டம் என்று தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இன்று கறுப்பு ஜூலை அரங்கேற்றப்பட்டு 43 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் பின்னணியில் கறுப்பு ஜூலை அரங்கேற்றப்பட்டதைப் போன்று 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீதான படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது.
இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். 9ஆயிரம் சிறுவர்கள் அநாதரவாகினர், 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு திட்டமிட்ட வகையில் 2009ஆம் ஆண்டும் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் இன வன்முறைகள் என்பது தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றது. 1956ஆம் ஆண்டு, 1977ஆம் ஆண்டு, 1983 ஆம் ஆண்டு என்று இந்த இன வன்முறைகள் தொடர்ந்திருந்தன.
இதன் பின்னரும் சிறுபான்மையின மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கதையாகவே மாறியிருந்தன. முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பல தடவைகள் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
தற்போது கூட சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இடம்பெறக்கூடிய நிலைமை நாட்டில் நீடித்தே வருகின்றது.
பெளத்த சிங்கள பேரினவாதத்தை பறைசாற்றும் வகையிலான செயற்பாடுகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட வகையில் பெளத்த சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரிலும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்ற பெயரிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருகின்றன.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரமானது சிறுபான்மையின மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையென்ற செய்தியையே சர்வதேசத்துக்கு வழங்கியிருந்தது. இந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இதனைவிட கப்பல்கள் மூலம் தமிழகத்துக்கு சென்றிருந்தனர்.
இவ்வாறு நாட்டில் பாதுகாப்பற்ற தன்மையையும் தமிழ் மக்களின் இடம்பெயர்வையும் ஆரம்பித்து வைத்த சம்பவமாகவே இந்த ஜூலை கலவரம் திகழ்ந்திருந்தது.
ஜூலை கலவரத்தில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதும் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இத்தகைய படுகொலைகளும் தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைப்பதற்கு மூலகாரணமாக திகழ்ந்தது. இதன் காரணமாகவே தமிழ் போராட்டக் குழுக்களில் பெருமளவான தமிழ் இளைஞர், யுவதிகள் தம்மை இணைத்துக் கொண்டிருந்தனர்.
இதனாலேயே யுத்தம் வியாபித்திருந்தது. அது பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இன்று இந்த நாடு பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையை அடைவதற்கும் அன்றைய ஜூலை கலவரம் உட்பட்ட வன்முறைகளே காரணகர்த்தாக்களாக அமைந்திருந்தன.
அன்று சிங்கப்பூரை விட வளர்ச்சியடைந்த நாடாக காணப்பட்ட இலங்கை, இன்று தலைகீழாக மாறுவதற்கும் இந்த இன வன்முறைகளே பிரதான காரணமாக அமைந்துள்ளன.
நாடு எதிர்காலத்தில் வளம்பெற வேண்டுமானால் இனியும் இனவன்முறைகளுக்கு இடமளிக்கக் கூடாது. அத்துடன் இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
இதற்கான நடவடிக்கைகள் இனியாவது எடுக்கப்பட வேண்டும். தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கின்றது. நாட்டிலுள்ள சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் கோட்பாடாக இருக்கின்றது. அது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஆனால், இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தவிர்க்க வேண்டுமானால் சிறுபான்மை மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது விழுமியங்கள் கட்டிக்காக்கப்பட வேண்டும். அவ்வாறான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் நாட்டில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது அவசியமாகவுள்ளது.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருக்கின்றது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்றே தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது.
இதன் காரணமாகவே சிறுபான்மையின மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் பேராதரவினை வழங்கியிருந்தனர். அந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றினால் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லுறவு வளர்க்கப்படும்.
ஆனால், அதற்கான செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபடுவதாக தெரியவில்லை. புதிய அரசிய லமைப்பை உருவாக்குவது தொடர்பிலோ அரசியல் தீர்வு குறித்தோ அரசாங்கம் அக்கறையற்றிருக்கின்றது. அது குறித்து கலந்துரையாடுவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை.
இந்த நிலைமை நீடிக்கக் கூடாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கமானது நாட்டில் இனியும் ஓர் இனக் கலவரம் வெடிக்கக் கூடாது என்று கருதினால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் தீர்வைக் காண முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.



