நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்-6 குழந்தைகள் பலி!: துப்பாக்கிச் சூடு நடத்தித் தற்கொலையா?

 

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ஹேவன் டவுன்ஷிப் (Grand Haven Township) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தி உள்ளே சென்றபோது 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க 2 பெரியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் தீப்பற்றுவதற்கு முன்பாகவே இறந்து கிடந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்த காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இது வெறும் தீவிபத்து மட்டுமல்ல என்றும், வீட்டில் இருந்தவர்களில் யாராவது ஒருவர் மற்றவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, வீட்டிற்குத் தீவைத்துத் தானும் தற்கொலை (Murder-Suicide) செய்திருக்கலாம் என்றும் காவல் துறை அதிகாரிகள் தீவிரமாகச் சந்தேகிக்கின்றனர்.

ஒட்டாவா கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் கேப்டன் ஜேக்கப் ஸ்பார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தச் சம்பவம் மிகவும் சிக்கலானது; வீட்டின் பெரும்பாலான பகுதிகள் அடர்ந்த புகையால் சூழப்பட்டிருந்ததால் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன” என்றார். வெளியில் இருந்து புதிய நபர்கள் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான தடயங்கள் எதுவும் தற்போதைக்குக் கிடைக்கவில்லை என்பதால், பொதுமக்களுக்கு வேறு ஆபத்து எதுவும் இல்லை என்றும், வீட்டில் வசித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்த வீட்டைச் சுற்றியிருந்த அண்டை வீட்டார், எப்போதும் சிரிப்பும் விளையாட்டுமாக இருக்கும் குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிச்சிகன் மாநிலப் பிரிவுத் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தீயணைப்புக் குழுவினர் இணைந்து வீட்டில் தீ வைக்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கைகள் முழுமையாக வெளியாகும் பட்சத்திலேயே மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.