நேபாளத்தில் ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட கொடூரமான பனிப்பாறை உடைப்பு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், நாட்டின் வடமேற்குப் பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவல்படி, வடமேற்கு நேபாளத்தில் உள்ள முஸ்டாங் (Mustang) மாவட்டத்தின் லோமந்தாங் பகுதிய மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு 9.53 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காட்மாண்டில் இருந்து சுமார் 375 கி.மீ தொலைவிலும் 35 கி.மீ ஆழத்திலும் உருவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மனாங், தோல்பா மற்றும் மியாக்டி ஆகிய அண்டை மாவட்டங்களிலும் பலமாக உணரப்பட்டன.
முஸ்டாங் மாவட்டம், சமீபத்தில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதேகோஷி நதிப் பகுதியிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்த நில அதிர்வால் உடனடியாகப் பெரும் உயிர்ச்சேதமோ அல்லது கட்டடச் சேதங்களோ ஏற்பட்டதாகப் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஏற்கனவே நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மலைப் பகுதிகளில் கூடுதல் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 4,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகியுள்ளனர். பேரழிவின் தடம் மாறுவதற்குள்ளேயே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், இமயமலைப் பிராந்தியத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.


