ஈரான்-எண்ணெய் விற்க அனுமதிக்கவில்லை எனில் வேறு யாராலும் விற்க முடியாது அமெரிக்காவிற்கு சிக்கல்

 

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், இருதரப்பிலும் அதிரடியான முறையில் காய் நகர்த்தி வருகின்றனர். தங்களை கச்சா எண்ணெய் விற்க அனுமதிக்கவில்லை எனில், வேறு யாராலும் விற்க முடியாது என எச்சரித்துள்ளனர்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் கச்சா எண்ணெய் முடக்கத்திற்கு வழிவகுத்து வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி சர்வதேச அளவில் முக்கிய கடல்வழி தடமாக இருக்கும் ஹார்மூஸ் நீரிணையை தங்கள் கட்டுக்குள் ஈரான் வைத்திருக்கிறது. இதேபோல் செங்கடலில் உள்ள பாப்பல் மாண்டேப் என்ற நீரிணையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

செங்கடலில் ஹவுதி படைகள் தாக்குதல்
சமீபத்தில் செங்கடல் வழியாக சென்ற சவுதி அரேபியா கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இனிமேல் ஹார்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரானில் உள்ள மின் நிலையம் அல்லது பாலத்தை குண்டு வீசி தகர்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாப், நாங்கள் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கில் உள்ள எந்த ஒரு நாடும் விற்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் விவகாரம் மேலும் பதற்றம் நிறைந்ததாக மாறியிருக்கிறது.

கச்சா எண்ணெய் முடக்கம் – என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
ஈரானின் கெடுபிடி தொடர்ந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு மீண்டும் 120 டாலருக்கு மேல் அதிகரித்துவிடும்.
எரிபொருள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் செலவீனங்கள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் பணவீக்கத்தின் போக்கு தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. இது அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்களது வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளிவிடும். கடைசியில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வதால் ஈரானின் பிடி சற்று அதிகரிக்கும். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து செல்ல வேண்டிய நிலை வராது என்கின்றனர்.
வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகள் தங்களது உள்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி வழித்தடம் ஆகியவற்றில் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும். இதனால் அமெரிக்கா எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நட்பு நாடுகள் தள்ளும்.

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும்
குறிப்பாக அமெரிக்காவை எடுத்து கொண்டால் எரிபொருள் செலவுகள் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையை தள்ளி வைக்கும். பொருளாதார மீட்சி என்பது தாமதமாகும்.
அமெரிக்கா வெளிநாடுகளில் தங்களது ராணுவத்திற்கு செய்யும் செலவுகள் மிக அதிகம். உள்நாட்டில் விலைவாசி உயர்ந்தால் அதை சீரமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கைகளுக்கு அதிக செலவுகள் செய்தால் அந்நாட்டு அரசு மீது விமர்சனங்களை ஏற்படுத்தும்.