ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை பகிரப்பட்ட வரலாற்று மற்றும் நாகரிகப் பாரம்பரியத்தின் மூலம் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் என்பது வெறும் நீர்வழிப்பாதை மட்டுமல்ல; அது நமது பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய எதிர்காலம் தீர்மானிக்கப்படவுள்ள ஒரு முக்கிய களமாகும். இந்தியப் பெருங்கடலால் இணைக்கப்பட்டுள்ள கடல்சார் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கையைப் பொறுத்தவரை, இது வெறும் கோட்பாடு சார்ந்த விஷயம் அல்ல; மாறாக, நமது வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் அன்றாட யதார்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் ஒருபோதும் இரு நாடுகளுக்கு எவ்வகையிலும் தடையாக இருந்ததில்லை; மாறாக, நமது மக்களுக்கு இடையே நெருக்கமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை வளர்ப்பதில் அது ஒரு ஊக்கியாகவே இருந்து வருகிறது. வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், இந்தியப் பெருங்கடல் தற்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் ஜனநாயக நாடுகள் என்ற வகையில், நாம் ஒரு கூட்டு எதிர்காலத்தைக் கொண்டுள்ளோம் என்று இலங்கையை குறிப்பிட்டு பேசினார்.
அதே நேரம் பாரம்பரிய அணுகுமுறைகளைத் தாண்டி, ஏற்கனவே உள்ள பரஸ்பர ஒத்துழைப்பு வாய்ப்புகளை வலுப்படுத்துவதோடு, இன்னும் நெருக்கமான மற்றும் வலிமையான கடல்சார் கூட்டாண்மைக்கான புதிய வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கடினமான காலங்களில் இலங்கையுடன் தோளோடு தோள் நின்று இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான உறவைப் போன்றது என குறிப்பிட்டுள்ளார்.



