இந்தியாவில் 6 மாதங்களில் 554 கணவர்கள் உயிரிழப்பு..

 

 

இந்தியாவில் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 554 கணவர்கள் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாகவே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், திருமணத்தை மீறிய உறவால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் குடும்பங்களுக்குள் நடக்கும் குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்து ஹரியானா மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்த ஏகம் நியாக் பவுண்டேஷன் சார்பில், கடந்த ஆறு மாதங்களில் நடந்த குற்ற சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நடப்பாண்டின் முதல் 6மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் மனைவிகளினாலும்,குடும்ப பிரச்சனை காரணமாக சுமார் மொத்தம் 554 கணவர்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கணவர்கள் படுகொலை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு ஒரு கணவர் தற்கொலை செய்து கொள்வதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.மேலும் இந்த அறிக்கையின் மூலம் மொத்தம் பதிவான 554 மரணங்களில் 322 சம்பவங்கள் படுகொலைகள் ஆகும்.

இந்த 322 கொலைகளில் சுமார் 60.2% அதாவது 194 வழக்குகள் திருமணத்தை மீறிய உறவு காரணமாக அரங்கேறி உள்ளது.குறிப்பாக மனைவியின் திருமணத்தை மீறிய உறவுக்கு கணவர் கண்டிப்பதாலோ அல்லது அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாலும் இந்த கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பாக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே கணவரை கொலை செய்த சம்பவங்கள் இதில் அதிகம் என்று இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கணவர்களைக் கொலை செய்ய விஷம் வைப்பது, உயிரோடு கொளுத்துவது, மின்சாரம் பாய்ச்சுவது, கழுத்தை நெரிப்பது மற்றும் கொன்றுவிட்டு உடலைத் துண்டு துண்டாக வெட்டி புதைப்பது போன்ற கொடூரமான முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்தத் தொண்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.திருமணத்தை மீறிய உறவை தவிர, எஞ்சிய 88 கொலைகளுக்குக் குடும்பத் தகராறு மற்றும் பணப் பிரச்சனைகளே காரணமாக இருந்துள்ளன.

மறுபுறம், குடும்பத் துன்புறுத்தல் தாங்க முடியாமல் 232 கணவர்கள் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோயுள்ளனர். இதில் 44.83% தற்கொலைகளுக்கு நீண்டகாலமாகக் குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகளே காரணம். மேலும் 24.57% சம்பவங்களில் மனைவி அல்லது மாமனார்-மாமியார் கொடுத்த சித்திரவதை மற்றும் பொய் வழக்குப் போடுவோம் என்ற மிரட்டல்களால் கணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் பலர் தங்களின் இறுதி நிமிடங்களில் வீடியோவாகவோ அல்லது கடிதமாகவோ தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக விட்டுச் சென்றுள்ளனர்.

மாநில வாரியாகப் பார்க்கும்போது, கணவர்கள் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் தான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அங்கு 93 கணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 103 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த வகையான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.