பெங்களூருவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக பிரவீன் குமார் (36) பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு விசாரணை தொடர்பாக 4 சிறுவர்களை கைது செய்தார். 15 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று, அவர்களை தடியால் தாக்கினார்.
மேலும் கட்டாயப்படுத்தி ஆபாசமான செயல்களில் ஈடுபட வற்புறுத்தினார். இதனை தனது கைப்பேசியில் பதிவு செய்த வீடியோ அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சம்பந்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பிரவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்த்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எனவே அம்ருதஹள்ளி காவல் துறையினர் தாமாக முன்வந்து உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் மீது போக்சோ வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று அவரை கைது செய்து, பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங், இவ்வழக்கை கொத்தனூர் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளார். மேலும் இவ்வழக்கில் பிரவீன்குமாருக்கு உடந்தையாக இருந்த காவலர் ராகவேந்திராவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்



