இந்திய போதகர் மீது இலங்கை பெண் பரபரப்பான முறைப்பாடு..!

 

மதுஷா என்ற இலங்கைத் தமிழ் பெண், இந்தியா- வேலூரில் உள்ள பென்டிகோஸ்டல் மிஷன் (TPM) சர்ச்சின் போதகர் வி. துரை மீது பாலியல் துர்நடத்தை தொடர்பான முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு, வேலூர் கோணவட்டம் தேவாலயத்தில் போதகர் வி. துரை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மதுஷா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவரிடம் ஆதாரம் கேட்டபோது, அவர் பேசிய தவறான உரையாடல்களை மதுஷா பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலய நிர்வாகம் போதகரைப் பாதுகாக்க முயற்சி செய்ததாகவும், பொலிஸார் முறையாக நடவடிக்கை எடுக்காமல் தன்னை அலைக்கழித்ததாகவும், பின்னர் சிவகாசி பொலிஸாரால் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு மிரட்டப்பட்டதாகவும் மதுஷா குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது போலியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், தான் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தான் ஒரு அகதி அல்ல, ஒரு இந்தியரைத் திருமணம் செய்துள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வழக்குகளால் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், பொலிஸாரின் மிரட்டல்களால் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.