பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை! தன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி சங்கீத்சன்!

 

எழுச்சிப் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன் (Hiphop Sangee) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் பாடிய பாடல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூன் 2ஆம் திகதி காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், அவரது பாடல்களில் அத்தகைய குறியீடுகளோ, நேரடி குறிப்புகளோ இல்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர். சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், அரசியல் பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த கைதுக்கு கடும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் சட்ட முஸ்தீபுகளை மேற்கொண்டனர். இவற்றின் தொடர்ச்சியாக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான கட்டளை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், சாதாரண நீதிமன்ற நடைமுறைகள் மூலம் பிணை கோர முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அன்றி, தண்டனை சட்டக்கோவையின் 120ஆம் பிரிவின் (அரசுக்கு எதிராக அவதூறு அல்லது அதிருப்தியை ஏற்படுத்துதல்) கீழ் மாற்றுமாறு சட்டமா அதிபர் காவற்துறையினருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், நகர்த்தல் பத்திரம் (Motion) ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணிகளின் பிணை விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பாடகரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.

பிணையில் விடுதலையாகிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாடகர் சங்கீத்சன், “என்னை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. சிறையில் இருந்த காலத்தில் எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த பொதுமக்கள், ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணை தண்டனை சட்டக்கோவையின் கீழ் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.