
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது இரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலுக்கு இந்த நடவடிக்கை “ஒரு சக்திவாய்ந்த பதில்” என்று அமெரிக்க கட்டளை மையமான சென்ட்காம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இராக்கில் உள்ள இரானிய ஆதரவுப் படைகளைக் குறிவைத்து, பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட முதல் கூட்டு அமெரிக்க-சௌதி தாக்குதல்களுடன் மோதல் விரிவடைந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்தப் போர் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், எந்த முடிவும் தெரியாமல் இப்போர் தற்போது ஐந்து மாதங்களாக நீடித்து வருகிறது.
பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் ஊடகம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், சௌதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை டிரம்ப் சந்தித்ததாகவும், பதற்றத்தைத் தணிக்க சௌதி அரேபியா விரும்புவதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சில நாட்கள் ஒப்பீட்டளவில் அமைதி நிலவியதைத் தொடர்ந்து, இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
ஒருவித ராஜீய தீர்வை எட்டும் நம்பிக்கையில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டதால், இரு தரப்பும் பல நாட்களாகத் தாக்குதல்களை நிறுத்தி வைத்திருந்தன.
டிரம்ப் இவற்றை “மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள்” என்று அழைத்தார், ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்று இரான் மறுத்தது.
புதன்கிழமை தாக்குதல்கள் அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்கப் படைகள் மீது ஒரு நாளுக்கு முன்பு இரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்குப் பதிலடி கொடுப்பதாக டிரம்ப் உறுதியளித்தார்.
டிரம்ப் என்ன கூறினார்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம், ஏனென்றால் அவர்களைத் தாக்குவதற்கான முறை இப்போது எங்களுக்கு வந்துள்ளது” என்று கூறினார்.
“தாக்குதல் வரப்போகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதைச் செய்ய வேண்டாம் என்று அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டனர்” என கூறினார்.
“குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்தின் ஆக்கிரமிப்புச் செயல்களுக்குப் பதிலடியாக,” ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளம் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்துத் தாக்கியதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
முக்கியமான வளைகுடா நீர்வழிப்பாதை வழியாக “பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வழியில்” பயணித்ததாகவும், “எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததாகவும்” கூறி, ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தங்களது கடற்படைத் தாக்கியதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, தொடர்ந்து 13 இரவுகள் நீடித்த தீவிர குண்டுவீச்சுத் தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
இரானின் ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கியதாக அமெரிக்கா கூறியது.
இதில் பலரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
செவ்வாய்க்கிழமை அன்று, சென்ட்காம் கூறுகையில், “கடந்த 72 மணிநேரத்தில் ஐ.ஆர்.ஜி.சி வழிநடத்திய 30-க்கும் மேற்பட்ட வான்வழி ட்ரோன் தாக்குதல்களுக்கு வலுவான பதிலடியாக, கிழக்கு இராக் முழுவதும் உள்ள பல பயங்கரவாத தளவாடங்கள் மற்றும் ஆயுதத் தளங்களை கூட்டு அமெரிக்க-சௌதி தாக்குதல்கள் அழித்தன” என்று தெரிவித்தது.
இரானின் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினரால் வழிநடத்தப்படும் இராக்கின் ‘பிராந்திய மக்கள் திரட்டல் படை’ (பிஎம்எப்ஃ) என்ற துணை ராணுவ அமைப்பு, தங்களது தளங்கள் மீது நடத்தப்பட்ட அமெரிக்க-சௌதி தாக்குதலில் குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பிஎம்எஃப் தளங்கள் மீதான குண்டுவீச்சை கண்டித்த இராக் அதிபர் அலுவலகம், இது “ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல் மற்றும் இராக்கின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல்” என்று குறிப்பிட்டது.
ஆனால், இந்தத் தாக்குதல்கள் “இராக் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டவை” என்று டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
சன்னி முஸ்லிம்களின் முன்னணி சக்தியாகத் தன்னைக் கருதும் சௌதி அரேபியாவும், மிகப்பெரிய ஷியா முஸ்லிம் நாடான இரானும், பிராந்திய ஆதிக்கத்துக்காகப் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன



