
உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் நகரின் மீது நேற்று முன்தினம் இரவு ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 7 வயது சிறுவன் மற்றும் 20வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 6 குழந்தைகள் உட்பட 60 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக 4 இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன. மேலும் சுமார் 25 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு மருத்துவமனை, பள்ளிகள், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக்கொண்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தின் மீது இந்த வாரம் உக்ரைன் நடத்திய தாக்குதல்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு பதிலடியாக ரஷ்யா இந்த கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றது.



