சீனாவின் விமானம் 150 வினாடிகளில் இலக்கை நோக்கி இறங்கும்


பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும் 40 மறுபயன்பாட்டு விண்வெளி விமானங்களைக் கொண்டு, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதிகபட்சம் 150 வினாடிகளுக்குள் பூமியில் உள்ள எந்தவொரு இலக்கையும் நோக்கி இறங்கத் தொடங்க முடியும் எனச் சீன ஆய்வாளர்கள் நடத்திய கணினி உருவகப்படுத்துதல் (computer simulation) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழக (Northwestern Polytechnical University) ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு, கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி ‘ஆக்டா ஏரோநாட்டிகா எட் ஆஸ்ட்ரோனாட்டிகா சினிகா’ (Acta Aeronautica et Astronautica Sinica) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை (DIA) வெளியிட்ட 130 பக்க அறிக்கையில், 2024-ஆம் ஆண்டு வாண்டார் (Vantor) நிறுவனத்தால் எடுக்கப்பட்ட சீனாவின் ரகசிய ‘ஷென்லாங்’ (Shenlong) எனக் கருதப்படும் டெல்டா-விங் விண்வெளி விமானத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கிவிட்டு விமான ஓடுபாதையில் தரையிறங்கும் திறன் கொண்ட இந்த விண்கலம், 2020-ஆம் ஆண்டு முதல் மூன்று சோதனைப் பயணங்களை மேற்கொண்டுள்ளது.

புதிய ஆய்வின்படி, பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் 40 விண்கலங்களை நிலைநிறுத்தினால், உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள 60 டிகிரி வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளுக்குத் தரையிறங்கத் தொடங்கும் காத்திருப்பு நேரம் ஒரு நிமிடமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் போலன்றி, திசையை மாற்றிப் பயணிக்கும் இத்தகைய விண்கலங்கள், அமெரிக்கா உருவாக்கி வரும் ‘கோல்டன் டோம்’ (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்குச் சவாலாக அமையலாம் எனப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

அதேநேரம், இந்த ஆய்வு முடிவுகள் முழுக்க முழுக்கக் கணினி உருவகப்படுத்துதல் அடிப்படையிலானவை என்றும், இலக்கைச் சென்றடையும் நேரத்திற்குப் பதிலாகச் சுற்றுப்பாதையிலிருந்து இறங்கத் தொடங்கும் நேரத்தையே இவை குறிக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தங்களது விண்வெளி விமானத் திட்டம் அமைதியான விண்வெளி ஆய்வு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்காக மட்டுமே உருவாக்கப்படுவதாகச் சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த ஆய்வு குறித்துச் சர்வதேச விண்வெளி நிபுணர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.