
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகே பறந்து ஆய்வு செய்வதற்காக ‘வாயேஜர்-1’ விண்கலத்தை கடந்த 1977-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி விண்ணில் ஏவியது. 1979-ல் வியாழன் கோளையும், 1980-ல் சனி கோளையும் கடந்து வெற்றிகரமாக ஆய்வு செய்த இந்த விண்கலம், 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரிய குடும்பத்தின் எல்லையைத் தாண்டி, நட்சத்திரங்களுக்கு இடையேயான ஆழமான விண்வெளிப் பகுதிக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற வரலாற்றைப் படைத்துத் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
கடந்த 49 ஆண்டுகளாக விண்வெளியில் எவ்வித ஓய்வுமின்றித் தொடர்ந்து பயணித்து வரும் இந்த விண்கலம், நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3:46 மணிக்கு, பூமியிலிருந்து சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடந்து ‘ஒரு ஒளிநாள் தூரம்’ என்ற புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளும் இந்தத் தொலைவுக்குச் சென்றதில்லை.
மணிக்கு சுமார் 61,000 கிலோமீட்டர் வேகத்தில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் வாயேஜர் 1 விண்கலம், இந்த அளவிலான தூரத்தைக் கடக்க ஏறத்தாழ ஐந்து தசாப்தங்கள் ஆகியுள்ளன. தற்போதைய நிலையில், பூமியிலிருந்து வாயேஜர் 1 விண்கலத்திற்கு ஒரு தகவல் (ரேடியோ சிக்னல்) அனுப்பினால், அது அந்த விண்கலத்தைச் சென்றடையவே 24 மணி நேரம் ஆகும். அங்கிருந்து அதற்கான பதில் சிக்னல் பூமிக்குத் திரும்ப மேலும் 24 மணி நேரம் ஆகும்.
1970-களின் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம், இன்றும் வெற்றிகரமாகத் தகவல்களைப் பரிமாறி வருவது விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த விண்கலம் புளூட்டோனியம்-238 என்ற கதிரியக்கப் பொருளின் மூலம் கிடைக்கும் அணுசக்தியைக் கொண்டே இது இயங்கி வருகிறது. தற்போது விண்கலத்தில் உள்ள சக்தி மெல்ல மெல்லக் குறைந்து வருவதால், அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கில், அதில் உள்ள முக்கியமற்ற கருவிகளை நாசா பொறியாளர்கள் படிப்படியாக அணைத்து வருகின்றனர்.
* ஒளிநாள் என்றால் என்ன?
ஒளி ஒரு விநாடிக்குச் சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் தன்மையுடையது. அந்த அதீத வேகத்தில் ஒளி தொடர்ந்து 24 மணி நேரம் பயணித்தால் கடக்கும் தூரமே ஒரு ‘ஒளி நாள்’ எனப்படுகிறது.
* பூமியின் செய்தியைச் சுமந்து செல்லும் தங்கத் தட்டு
வாயேஜர்-1 விண்கலத்தில் ‘கோல்டன் ரெக்கார்டு’ எனப்படும் தங்க முலாம் பூசப்பட்ட தட்டு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பூமியின் ஒலிகள், இசை, படங்கள் மற்றும் 55 மொழிகளில் பதிவுசெய்யப்பட்ட வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. வேறு ஏதேனும் நாகரிகத்தைச் சேர்ந்த வேற்றுகிரக உயிரினங்கள் இந்த விண்கலத்தைக் கண்டுபிடித்தால், பூமி மற்றும் மனிதகுலம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தத் தட்டு அனுப்பப்பட்டுள்ளது.



