மீண்டும் இஸ்ரேல் பிரதமர் பதவியை கைப்பற்றும் நெதன்யாகு? எதிர்பாராத டிவிஸ்ட்டால் பரபரப்பு

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த அக். 27ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கூட்டணி 53 இடங்களுடன் தனிப்பெரும் அணியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மைக்கான இடங்களை எட்டவில்லை. முன்னாள் ராணுவ தலைமை தளபதி காடி ஐசன்கோட்டின் ‘யாஷர்’ கட்சி 21 இடங்களிலும், அவரது கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றது. யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் கிங் மேக்கராக மாறின. இந்த அரபு கட்சிகள் தற்போது காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவாக உள்ளன. இதனால் காடி ஐசன்கோட் தான் இஸ்ரேலின் அடுத்த பிரதமராகும் சூழல் உள்ளது.

இருப்பினும், நெதன்யாகு பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. பிரதமர் பதவியை தக்க வைக்கும் முனைப்பில் நாட்டில் ஒற்றுமை ஆட்சி அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதை காடி ஐசன்கோட் மறுத்தார். இந்நிலையில் தான் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் முன்னாள் பிரமதர் நப்தாலி பென்னட்டும், பெஞ்சமின் நெதன்யாகுவும் திடீரென சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தற்போது நாப்தாலி பென்னட் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது ‘பென்னட் 2026’ என்ற கட்சியும், முன்னாள் பிரதமர் யாயர் லாபிட் என்பவரின் ‘யேஷ் அதித்’ என்ற கட்சியும் டுகெதர் என்ற பெயரில் கூட்டணி அமைத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன. இந்த கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றது. பிரதமர் பதவியை பிடிக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் இந்த 12 இடங்களுடன் சேர்த்து பலம் 65 ஆக உயரும். நெதன்யாகுவால் எளிதாக பிரதமராக முடியும் என்பதால் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்பில் நாப்தாலி பென்னட் – பெஞ்சமின் நெதன்யாகு இடையே என்ன பேசப்பட்டது? என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை.