அமெரிக்க அதிபர் திட்டவட்டம் ஈரான் அணு ஆயுதத்தை நிச்சயம் அனுமதிக்க போவதில்லை

சீனாவில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது என்பது எளிதான காரியம் அல்ல என குறிப்பிட்டார்.

உலக நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும், அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான அபாயத்தைக் குறைப்பது குறித்தும் விவாதிப்பதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தனித்துவமான நிலையில் உள்ளன. இந்த ஆயுதங்களின் ஆற்றல் நம்பமுடியாதது, கற்பனை செய்ய முடியாதது. நம் நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும்; உண்மையைச் சொல்லப்போனால், இது மிகவும் கடினமான காரியம் என்றார்.

தொடர்ந்த பேசிய டிரம்ப், ஏனெனில், ஒருமுறை அணு ஆயுதங்களை பெற்றுவிட்டால், அவற்றை மீண்டும் கைவிடுவது என்பது மிகவும் கடினம். ஒரு நாட்டின் தலைவராக, அணு ஆயுதங்களைக் கைவிடுவது என்பது மிகவும் கடினமான ஒரு முடிவாகும். இதுதான் யதார்த்தமான சூழல். ஒரு நாட்டிடம் ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் இருக்கும்போது, ​​அவற்றை விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதே சமயம், நம்மைத் தவிர வேறு சில நாடுகளிடமும் குறைந்த எண்ணிக்கையிலாவது அணு ஆயுதங்கள் உள்ளன. எனவே, அவற்றை முழுமையாகக் கைவிடுவது என்பது எளிதான காரியம் அல்ல.

அதே நேரம் உலகம் முழுவதும் பிற நாடுகளில் அணு ஆயுதப் பரவல் ஏற்படுவதைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவது மிக அவசியமாகும். ஈரானைப் பொறுத்தவரை நாங்கள் அதையேதான் செய்து கொண்டிருக்கிறோம். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.