
உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் 365 சேவைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில்நுட்பத் தடை 12 மணித்தியாலங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், சேவையை வழமைக்குக் கொண்டுவரத் தாம் முன்னெடுத்த மாற்றங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சேவைத் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள நிறுவனம், பாவனையாளர் நெரிசல் சமநிலையின்மையைச் சரிசெய்து கொள்ளளவை அதிகரிக்க மாற்று வழிமுறைகளை அடையாளம் கண்டு வருவதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன், சேவையகங்களின் கொள்ளளவை அதிகரிக்க மெய்நிகர் இயந்திரங்களை விரிவுபடுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இத்தொழில்நுட்பக் கோளாறினால் உலகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் பயன்படுத்தும் Outlook, Exchange Online, Microsoft Teams, Copilot, OneDrive, SharePoint, Word, Excel மற்றும் PowerPoint ஆகிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை (12) இரவு 11.24 மணியளவில் அமெரிக்கப் பிராந்தியத்தில் எக்ஸ்சேஞ்ச் ஒன்லைன் மின்னஞ்சல் அணுகலில் சிக்கல் ஏற்பட்டதாக மைக்ரோசொப்ட் முதலில் அறிவித்தது. பின்னர் இது உலகளாவிய தடையாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் அதிகப்படியான பாவனையாளர் நெரிசலே இதற்குக் காரணம் எனக் கருதப்பட்ட போதிலும், பல சேவையகங்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்தமையால் ஏனைய கட்டமைப்புகளில் பாரிய அழுத்தம் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என மைக்ரோசொப்ட் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இது சைபர் தாக்குதல் அல்ல என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கைமற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக அமெரிக்காவில் மாத்திரம் டவுன்டிடெக்டர் தளத்தில் 130,000-க்கும் மேற்பட்ட அவுட்லுக் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.
மேலதிக விவரங்களை மைக்ரோசொப்ட் நிர்வாக மையத்தில் MO1550821 மற்றும் EX1550543 ஆகிய இலக்கங்களின் கீழ் பார்வையிட முடியும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



