–
ஹரியானா மாநிலம் சோனிபட்டில், அத்தை கையில் இருந்த 6 மாத குழந்தையை பிட்புல் நாய் திடீரென தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சோனிபட்டின் சிக்கா காலனியில், குழந்தையின் அத்தை அவரைத் தூக்கிக்கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பாய்ந்து வந்த பிட்புல் நாய் அவர்களைத் தாக்கியுள்ளது. நாய் பாய்ந்ததில் நிலைதடுமாறிய பெண் கீழே விழுந்ததுடன், குழந்தையும் சாலையில் விழுந்துள்ளது.
அப்போது குழந்தையை நாய் கவ்வியதாகக் கூறப்படுகிறது. குழந்தையை மீட்க அப்பெண்ணும், அங்கிருந்த சிலரும் முயன்றபோதும், நாய் குழந்தையை விடாமல் கடித்து இழுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
தாக்குதலில் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, ரோத்தக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பிட்புல் நாய் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிந்தது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மேலும், நாயின் உரிமையாளர் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினாரா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை குழந்தையின் குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



