
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரபல தடயவியல் நிபுணர் மைக்கேல் பிரீமேன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019ம் ஆண்டு நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் மத்திய சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் சிறை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட சர்வதேச அரசியல் பிரமுகர்களின் பாலியல் ரகசியங்களை மறைப்பதற்காகவே எப்ஸ்டீன் சிறைக்குள் கொலை செய்யப்பட்டதாக நீண்ட காலமாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், எப்ஸ்டீனின் சகோதரர் வழங்கிய முழுமையான பிரேத பரிசோதனை கோப்புகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தடயவியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் பிரீமேன் ஒரு வருடமாக தீவிர ஆய்வு செய்தார். ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவரான இவர், லண்டனில் உள்ள மிடில் டெம்பிள் சட்ட அமைப்பில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். எப்ஸ்டீனின் கழுத்தில் சுருக்கிட்ட தடத்திற்கு மேலே நகக்கீறல்கள், கழுத்தின் அடிப்பகுதியில் ரத்தக்கட்டு மற்றும் இடது தோள்பட்டை தசையில் ஆழமான புதிய காயம் ஆகியவை இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து மைக்கேல் பிரீமேன் அளித்த பேட்டியில், ‘தற்கொலை செய்து கொள்ள எப்ஸ்டீன் விரும்பியிருந்தால் கூட, அவர் உடலில் இந்தக் காயங்களை அவரே ஏற்படுத்திக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.
பின்புறமிருந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் அதே கயிற்றைப் பயன்படுத்தி படுக்கையில் உடலைத் தொங்கவிட்டுள்ளனர். உடலை நேரில் பார்ப்பதற்கும், எங்களிடம் உள்ள 30க்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஆவணங்களில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி எப்ஸ்டீனின் மரணத்தைத் தற்கொலை என அறிவிக்க நியூயார்க் மருத்துவ பரிசோதகர் ஆரம்பத்தில் தயங்கியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், எப்ஸ்டீன் தற்கொலைதான் செய்து கொண்டார் என்ற 2019ம் ஆண்டின் முந்தைய முடிவிலேயே நியூயார்க் நகர மருத்துவ பரிசோதனை அலுவலகம் தற்போதும் உறுதியாக உள்ளது.



