
கார்த்திகை மாதம், சூரியன் விருச்சிகம் ராசியில் அமரக்கூடிய மாதம். இந்தப் பராபவ வருடத்தில் கார்த்திகை மாதம் என்பது, கூடுதல் விசேஷமான மாதமாக இருக்கும். கார்த்திகை 1 முதல் கார்த்திகை 29 வரை. ஆமாம்! இந்த வருடம் கார்த்திகை மாதம் 29 நாட்கள்தான். ஆங்கில மாதங்களில் எப்போதும் பிப்ரவரியில்தான் 28 அல்லது 29 நாட்கள் வரும். மற்ற மாதங்களில் 30 அல்லது 31 நாட்கள் வரும். ஆனால், தமிழ் மாதங்கள் அப்படி வராது. ஒவ்வொரு வருடமும் சில மாதங்களின் நாட்கள் மாறும். அந்த வகையில், தை அல்லது கார்த்திகை மாதத்தில் 29 நாட்கள் வரும். இதைவிட விசேஷமாக ஆனி மாதத்தில் எப்போதுமே 32 நாட்கள் வரும். அந்த வகையில், இந்த பராபவ வருடத்தில் கார்த்திகை மாதத்தில் 29 நாட்கள் என்ற கணக்கு அமைகிறது.
இது, இந்த வருடம் 17.11.2026 முதல் 15.12.2026 வரையான தினங்களாக அமையும். சூரியன் விருச்சிக ராசியில் இந்த மாதத்தில் இருப்பார், விருச்சிகம் சூரியனுக்கு பகைவீடு.
எப்போதும் சொல்வதுதான், சூரியன் பகைவீட்டில் இருந்தால் என்ன ஆகும்? முதல் விஷயமாக ஆரோக்கியம் பாதிப்புகள் தலைதூக்கும். இது எதோ தமிழ்நாட்டில் மட்டும்தான், இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை. உலக அளவில் தொற்று நோய்கள் பாதிப்பு, புதிய நோய்ப் பரவல்கள் என்று பிரச்னைகள் தலைதூக்கும்.
இந்த சமயத்தில், ஏற்கனவே உள்ள அனுபவத்தின் அடிப்படையில், பாதுகாப்புக் கவசம் அணிவது, பொது இடங்களில் அதிக நெருக்கம் தவிர்ப்பது என்று இருப்பது நம்முடைய ஆரோக்யத்துக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய விதிமுறை. கார்த்திகை மாதத்தின் தொடக்க நாளுக்கு மிக முக்கியமான விசேஷம் ஒன்று உண்டு. அது ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் திருநாள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நான் சொல்வது, அன்றைய தினம் விஷ்ணுபதி புண்ய காலம் என்ற சிறப்புண்டு என்பதைத்தான்.
சூரியன், ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில் சஞ்சாரம் செய்யக் கூடிய மாதத்தின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களின் முதல் தினம் விஷ்ணுபதி புண்ணிய காலம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்குச் செல்வது, பெருமாள் நமாவளி சொல்வது, கேட்பது, இப்படி எல்லாமே தனிச் சிறப்பான நற்பலனைத் தரும். 17.11.2026, கார்த்திகை 1 ஆம் தேதி. இந்த மாதத்திலே வரக்கூடிய சிறப்பான விசேஷம் என்று பார்த்தால், அது அண்ணாமலையார் தீபம், திருவண்ணாமலை தீபம் என்றெல்லாம் சொல்லக் கூடிய கார்த்திகை தீபத்திருநாள். விளக்கு என்றாலே வெளிச்சம்தான், விடியல்தான், பிரகாசம்தான். தினம் தினம் ஏற்றினாலும், கார்த்திகை தீபம் வரும் தினத்தில் விளக்கு ஏற்றி வைப்பது மிகமிக விசேஷம். திருவண்ணாமலை தீபம், கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி, அதாவது 24.11.2026 அன்று அமைகிறது.
அதற்கு முந்தைய நாள், கார்த்திகை மாத முதல் சோமவாரமாக அமைகிறது. மேலும், அன்றைய தினமே மாலையில் பரணி தீபம் அமைகிறது. கார்த்திகை மாத சர்வாலய தீபம், அண்ணாமலையார் தீபம், பாஞ்சராத்ர தீபம் போன்றவையும் அன்றே அமைகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலைக்கு செல்ல இயலாவிட்டாலும், “அண்ணாமலையானுக்கு அரோஹரா’’ என்ற திருநாமத்தினை குறைந்தது பதினொருமுறை சொல்லுங்கள். முழுமையான பலன் கிடைக்கும்.
கார்த்திகை மாத மஹாத்மியம், இதை ரொம்பவே முக்கியமானதாகச் சொல்கிறது. அன்றைய தினம்தான் சிவபெருமான் விண்ணும் மண்ணும் தொட்டு பெரும் ஜோதியாக நின்றார். பிரம்மா, விஷ்ணுவுக்கு இடையே, யார் பெரியவர் என்று எழுந்த போட்டியில், சிவன், தானே முழு முதல்வன், பெரியோன் என உணர்த்தும் விதமாக ஜோதியாக நின்ற தினம், “திருக்கார்த்திகை தீப தினம்’’ என்கிறது புராணம்.
ஆறு உருவங்களுடன் அவதரித்த முருகப் பெருமானை, அன்னை பார்வதி அணைத்து ஓர் உருவாக்கிய தினமும் இந்தக் கார்த்திகை தீபத் திருநாள்தான். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு, சிறப்பு சேர்க்கும் திருநாளும் இந்த தினம்தான். கார்த்திகை மாத மஹாத்மியம் இந்த மாதத்தின் பெருமையையும், கார்த்திகை தீபத்தின் சிறப்பையும் சொல்வதையெல்லாம் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட உயர்வானதும், விஷ்ணுபதி புண்ணிய காலத்திலே பிறக்கக் கூடியதுமான இந்தக் கார்த்திகை மாதத்தில், உலக அளவில் இந்தியாவில், தமிழகத்தில் எந்த மாதிரியான பொதுப்பலன்கள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம். தமிழகம் முழுக்க பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். இலங்கைக்குக் கிழக்கே புதிய புயல் உருவாகும். எதிர்பாராமல் பெய்யக் கூடிய கனமழையால் பல இடங்களில் சேதங்களும், சேதாரங்களும் ஏற்படும்.இந்திய செய்திகள்
சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை, குறிப்பாக இரவு நேரத்தில் மழையின் அளவு அதிகரித்துக் காணப்படும். மலைப்பகுதிகள், கடற்பகுதிகளில் இடிவிழுவதால் பாதிப்புகள் ஏற்படும். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணாறு, வால்பாறை, இப்படி மலைப் பிரதேசங்கள், சுற்றுலா தலங்களில் எதிர்பாராத நிலச்சரிவுகள், மலைப் பாறைகள் உருள்வதால் தடைகள், தொலைதொடர்புகள் துண்டிக்கப்படுவது இத்தகைய பிரச்னைகள் எல்லாம் உருவாகக்கூடும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்யும் மழையால், குடிநீர்த் தேக்க நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படும். மழைக்காலங்களில் இடி, மின்னல் அதீதமாகக் காணப்படும். அதேசமயம் இத்தகைய நீர் நிலைகளில் எதிர்பாராத விரிசல்கள், பழுதுகளால் பெருமளவு நீர் வீணாகவும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளபடியால், முன்கூட்டியே உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.
பாண்டிச்சேரி, காரைக்கால், கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். திருப்பூரில் நூற்பாலையில் எதிர்பாராத விபத்தினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. இது குறிப்பாக, மின்சாரம் அல்லது தீயினால் ஏற்படக் கூடிய விபத்தாக இருக்கலாம் என்பதால், தகுந்த முன் எச்சரிக்கை அவசியம். தேனி மாவட்டப்பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய மழை பெய்வதும் அதனால் வெள்ள அபாயம் ஏற்படுவதும் நிகழக்கூடும். சென்னைக்குக் கிழக்கே சுமார் 1200 கி.மீ. தொலைவில் அதாவது அந்தமான் நிகோபார் தீவுகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அது, வலுத்து பெரும் பலத்துடன் புயலாகத் தாக்கக்கூடும். ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படக் கூடும். பொதுவாக மாதம் முழுக்க மந்தமாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வேளாங்கண்ணிக்கு அருகே கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதேபோல் எதிர்பாராத இடங்களில் காட்டுத் தீயின் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தும். உலகளவில், பல இடங்களில் எதிர்பாராத பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, நிலை குலையச் செய்யும். அதேசமயம், உலகளவில் மனிதர் களிடையே ஏற்படக் கூடிய வக்கிர குணங்களால், தேவையற்ற போராட்டங்கள், இன மோதல்கள் எல்லாம் ஏற்படலாம். இவை எல்லாம் பஞ்சாங்கக் குறிப்புகளே தவிர, பயமுறுத்துவதற்காகச் சொல்லப்படுபவை அல்ல. எனவே உணர்ந்து முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிரபலங்கள் பலரின் பாதுகாப்பு கேள்விக் குறியாவதும், எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதும் இந்தக் கார்த்திகை மாதத்தில் நிகழக் கூடும்.
எப்போதுமே, கார்த்திகை மாதத்தில் ஒருவித பரபரப்பு, படபடப்பு மனிதர்களிடையே காணப்படும். இதனால்தான், அதனை அமைதிப்படுத்தும் விதமாக மாலை அணிவது, விரதம் இருப்பது போன்றவற்றையெல்லாம் சொல்லிவைத்தார்கள். மாலை அணிய, விரதம் இருக்க இயலாவிட்டாலும் இந்த மாதத்தில் வீண் சச்சரவுகளைத் தவிர்ப்பது, அதீத உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்துவது, சமூக வலைதள விஷயங்களில் எப்போதும் மூழ்கிக் கிடப்பதைத் தவிர்ப்பது, எல்லோருடனும் நட்பு உணர்வுடன் பழகுவது, தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவது, இவை எல்லாம் சங்கடங்களைத் தவிர்த்து சந்தோஷத்தை அனுபவிக்க உதவும்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்துக்கு நீராதாரம் கிடைத்தாலும், பெரும் மழையால் வெள்ளம், சூறாவளியால் பாதிப்பு என பிரச்னைகளும் அதிகரிக்கும். பயிர்கள் அழிவதால், விலைவாசி உயரும். திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி பகுதிகளில் கடல் நீர் திடீரென்று உள்வாங்க வாய்ப்புண்டு.
பொதுவாக இந்தக் கார்த்திகை மாதத்தில் சூரியன் பகைவீட்டில் இருப்பதால், எப்போதும் சொல்வதுபோல் பிரபலங்களின் பாதுகாப்பு, உடல்நலத்தில் கவனம், நாட்டின் எல்லைப் பகுதிகளில் போர் அபாயம், அரசியல் தலைவர்களுக்கு அச்சுறுத்தல்கள், வான்வெளியில் விபத்துகள், விமானப் பழுதுகளால் பிரச்னைகள் இப்படிப் பலவும் ஏற்படக் கூடும்.
இவை அனைத்தையும் தகுந்த முன் எச்சரிகை நடவடிக்கைகளால் தவிர்க்கவும் முடியும் என்பதால், அவற்றுக்கு கவனம் செலுத்துவது நல்லது.இந்தக் கார்த்திகை மாத்தில், செவ்வாய்க் கிழமைகளில் முருகன், துர்க்கை, அங்காளம்மன் போன்ற தெய்வங்களை வணங்குவது விசேஷமான நற்பலன்களைத் தரும். குறிப்பாக, நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு ஒரே ஒரு அகல்தீபமாவது ஏற்றி வைத்துக் கும்பிடுவது, கூடுதலான நற்பலனைத் தரும்.
எந்த சமயத்திலும் தேவையற்ற உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பதும், வேண்டாத வாக்குவாதங்களைத் தவிர்த்து, எல்லோருடனும் நட்புடன் பழகுவதும், கார்த்திகை மாதம் முழுக்க நற்பலன்களைத் தந்து மாதம் முழுக்க மகிழ்ச்சி நிறைய வைக்கும்.
கார்த்திகை மாத சுப முகூர்த்தங்கள்:
இந்த மாதத்தில் பரிபூரண சுபமுகூர்த்த தினமாக, கார்த்திகை மாதம் 6-ஆம் தேதி அதாவது 22.11.2026, ஞாயிற்றுக் கிழமை, அஸ்வினி நட்சத்திரம், திரயோதசி திதி, சித்த யோகம், விருச்சிக லக்னம், காலை 6.30-8.00 மணி வரையிலான முகூர்த்தம் அமைகிறது.
பஞ்சக பரிகார முகூர்த்தங்கள்:
கார்த்திகை 4 (20.11.2026) வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம், விருச்சிகம் லக்னம், காலை 7.00-8.00 பரிகாரம் தீபம் தானம்.
கார்த்திகை மாதம் 13 (29.11.2026) ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை பஞ்சமி, பூசம் நட்சத்திரம், சித்தயோகம், விருச்சிகம் லக்னம், காலை 6.00-7.30. பரிகாரம் எலுமிச்சம்பழம் தானம்.
கார்த்திகை மாதம் 18 (4.12.2026) வெள்ளிக் கிழமை, தேய்பிறை ஏகாதசி, ஹஸ்தம் நட்சத்திரம், அமிர்த யோகம், விருச்சிக லக்னம் காலை 6.00-700. பரிகாரம் சந்தனம் தானம்.
கார்த்திகை மாதம் 27 (13.12.2026) ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி, திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம், கும்பம் லக்னம், காலை 11.00-பகல் 12.00. பரிகாரம் சந்தனம் தானம்.
கார்த்திகை மாதம் 28 (14.12.2026) திங்கள் கிழமை, பஞ்சமி திதி, திருவோணம் நட்சத்திரம், அமிர்த யோகம், விருச்சிகம் லக்னம், அதிகாலை 4.30-6.00. பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிவிடுவதால், பரிகாரம் தேவையில்லை.
கார்த்திகை மாத விசேஷ தினங்கள்:
ஆங்கிலத் தேதி / தமிழ்த்தேதி / கிழமை / திதி / நட்சத்திரம் / விசேஷம்.
நவம்பர் 17, கார்த்திகை 1, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி / நவமி, அவிட்டம் / சதயம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாதப்பிறப்பு, விஷ்ணுபதி புண்யகாலம், ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள், கரிநாள்.
நவம்பர் 18, கார்த்திகை 2, புதன்கிழமை, நவமி / தசமி, சதயம் / பூரட்டாதி, திரேதா யுகாதி.
நவம்பர் 20, கார்த்திகை 4, வெள்ளிக் கிழமை, தசமி / ஏகாதசி, உத்திரட்டாதி / ரேவதி, சுக்லபட்ச சர்வ ஏகாதசி.
நவம்பர் 21, கார்த்திகை 5, சனிக்கிழமை, ஏகாதசி / துவாதசி, ரேவதி / அஸ்வினி, சாதுர்மாஸ்ய விரதபூர்த்தி, ஸ்வாரோசிஷ மன்வாதி.
நவம்பர் 22, கார்த்திகை 6, ஞாயிற்றுக் கிழமை, துவாதசி / திரயோதசி, அஸ்வினி / பரணி, சுக்லபட்ச மகாபிரதோஷம், வியதீபாத சிராத்தம்.
நவம்பர் 23, கார்த்திகை 7, திங்கள்கிழமை, திரயோதசி / சதுர்த்தசி, பரணி / கார்த்திகை, பரணி தீபம், கார்த்திகை மாத முதல் சோமவாரம், கரிநாள்.
நவம்பர் 24, கார்த்திகை 8, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி / பௌர்ணமி, கார்த்திகை / ரோகிணி, பௌர்ணமி, கிருத்திகை, அண்ணாமலையார்தீபம், சர்வாலய தீபம், பாஞ்சராத்ர தீபம். வைகானஸ தீபம்.
நவம்பர் 27, கார்த்திகை 11, வெள்ளிக் கிழமை, திருதியை / சதுர்த்தி, திருவாதிரை / புனர்பூசம், கிருஷ்ணபட்ச சங்கடஹர சதுர்த்தி, திதி திவயம். மறுநாள், சனிக்கிழமையன்று சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
டிசம்பர் 1, கார்த்திகை 15, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி / நவமி, மகம் / பூரம், காலபைரவ அஷ்டமி, வைதிருதி சிராத்தம்.
டிசம்பர் 4, கார்த்திகை 18, வெள்ளிக் கிழமை, ஏகாதசி / துவாதசி, ஹஸ்தம், சித்திரை, கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி.
டிசம்பர் 7, கார்த்திகை 21, திங்கட்கிழமை, சதுர்த்தசி / அமாவாசை, விசாகம் / அனுஷம், மாத சிவராத்திரி, கார்த்திகை மூன்றாவது சோமவாரம்.
டிசம்பர் 8, கார்த்திகை 22, செவ்வாய்க் கிழமை, அமாவாசை, அனுஷம், கேட்டை, சர்வ அமாவாசை, திதி திரிதின ஸ்ப்ருக்.
டிசம்பர் 10, கார்த்திகை 24, வியாழக்கிழமை, பிரதமை / துவிதியை, மூலம், / பூராடம், மார்க்கசிர சுத்த பிரதமை, சந்திரமான மார்க்கசிர மாதம் ஆரம்பம், சந்திர தரிசனம்.
டிசம்பர் 12, கார்த்திகை 26, சனிக்கிழமை, திருதியை / சதுர்த்தி, உத்திராடம் / திருவோணம், சுக்லபட்ச சதுர்த்தி.
டிசம்பர் 13, கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை, சதுர்த்தி / பஞ்சமி, திருவோணம் / சதுர்த்தி விரதம், திருவோணவிரதம், நட்சத்திர திரிதின ஸ்ப்ருக்.
டிசம்பர் 14, கார்த்திகை 28, திங்கட்கிழமை, பஞ்சமி / சஷ்டி, திருவோணம் / அவிட்டம், சுக்லபட்ச சஷ்டி, கார்த்திகை நான்காவது சோமவாரம்.
டிசம்பர் 15, கார்த்திகை 29, செவ்வாய்க் கிழமை, சஷ்டி / சப்தமி, அவிட்டம் / சதயம், சஷ்டி விரதம், நகரத்தார் பிள்ளையார் நோன்பு.



