உளவுத்துறை எச்சரிக்கை அமெரிக்க உயரதிகாரிகளை கொல்ல ஈரான் சதி..!!என்னை தாக்கினால் நீங்களும் காலி’- டிரம்ப் பதில்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மற்றும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க உயர் அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் கொலைச் சதியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளைக் கொல்ல ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜே கிளேட்டன், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரசாயன ஆயுதங்கள் அல்லது கதிரியக்க வெடி குண்டுகளைக் கொண்டு அமெரிக்க மூத்த அதிகாரிகளை கொல்ல ஈரான் திட்டமிட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்க அதிகாரிகள் மீது உடனடித் தாக்குதல் நடக்கும் என்பதற்கான உறுதியான நேரடி ஆதாரங்கள் இல்லை என்றாலும், பாதுகாப்பை அமெரிக்க அரசு பலப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூத்த அதிகாரிகள் மட்டுமின்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட ஈரானின் கொலைப் பட்டியலில் உள்ளதாகவும், அவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஈரான் தரப்போ இது முற்றிலும் பொய் என மறுப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. மேலும் அமெரிக்க உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்களை குறிவைத்து ஈரான் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்த சூழலில், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை புல்வெளியில் மரைன் ஒன் ஹெலிகாப்டர் அருகே நின்றிருந்தார்.

அப்போது நிருபர் ஒருவர், ‘ஈரான் டிரோன்கள் உங்களை தனிப்பட்ட முறையில் குறிவைப்பது குறித்து கவலைப்படுகிறீர்களா?’ என கேட்டார். இதற்கு டிரம்ப் உடனடியாக, ‘நான் உங்களை நினைத்துதான் கவலைப்படுகிறேன், ஏனென்றால் அவர்கள் என்னை தாக்கினால் நீங்களும் இருக்க மாட்டீர்கள். எனவே கவனமாக இருங்கள்’ என்று சைகை காட்டி பதிலளித்தது பெரும் வியப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.