ஜெர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (ஏஎப்டி) அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. நாஜி காலத்திற்குப் பிறகு ஜெர்மனியில் ஒரு தீவிர வலதுசாரி கட்சி ஆட்சியமைக்க உள்ளது இதுவே முதல்முறையாகும்.
ஜெர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நேற்றுமுன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான ஆளுங்கட்சியான சி.டி.யு படுதோல்வியைச் சந்தித்தது. கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த கட்சி வெறும் 17.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், வலதுசாரி ஏஎப்டி கட்சி கடந்த தேர்தலை விட இருமடங்கு அதிகமாக 43.8 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஏஎப்டி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெறத் தவறியதால், ஆட்சி அமைக்க கூட்டணி பேச்சுவார்த்தை அவசியமாகியுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதில் பல வாரங்கள் இழுபறி ஏற்படலாம். ஏஎப்டி தலைவர் உல்ரிச் சீக்மண்ட், தங்கள் கட்சிக்கு வாக்களித்த மக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாஜி ஆட்சிக்குப் பிறகு ஜெர்மனியில் ஒரு மாநில அரசை வழிநடத்தும் வாய்ப்பை ஒரு தீவிர வலதுசாரி கட்சி பெறுவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமுக வலைதள பக்கத்தில் தேர்தல் முடிவை பகிர்ந்த நிலையில், பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஏஎப்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



