இரத்த நாள அடைப்பை நீக்கும் SVC Stenting எனும் சத்திர சிகிச்சை

எம்மில் சிலருக்கு திடீரென்று கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு பேசுவதற்கும், சுவாசிப்பதற்கும் கடினமான சூழல் ஏற்படக்கூடும்.

இத்தகைய நெருக்கடியான உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய அவசர நிலையில் வைத்தியர்கள் சுப்பீரியர் வேனா காவா ஸ்டென்டிங் – SVC Stenting எனும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிலருக்கு பாலின வேறுபாடு இன்றி வயது வித்தியாசம் ஏதும் இன்றியும் முகம்- கழுத்து- கை- ஆகிய பகுதிகளில் இயல்பான அளவை விட கூடுதலான வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது தொடர் இருமல், கழுத்து மற்றும் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம், தலைவலி, இரத்த அழுத்த உயர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்… உங்களுடைய மார்பு பகுதியில் சிக்கலான சூழலில் கட்டி பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் அல்லது ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் இவர்களுக்கு சில பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி எனும் சிகிச்சை பிரிவின் கீழ் சுப்பீரியர் வேனா காவா ஸ்டென்டிங் எனும் நவீன சத்திர சிகிச்சையை உடலில் கீழ்பகுதியில் இருந்து பிரத்யேக குழாய் மூலம் உள்ளே செலுத்தி இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சீராக்குவார்கள்.

பொதுவாக உடலின் மேற்பகுதியில் இருந்து அதாவது தலை- கழுத்து- கைகள்- ஆகிய உறுப்புகளில் இருந்து இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சீராக்க இதுபோன்ற நவீன சத்திர சிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறார்கள்.

மார்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் கட்டிகள்… ரத்த நாளத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாலும்… இந்த ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாக குருதி ஓட்டம் தடைபடும் போதும்… இத்தகைய நவீன சத்திர சிகிச்சை அவசியமாகிறது.

இத்தகைய நவீன சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையையும் பராமரிப்பு முறையையும் உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பு மீண்டும் நிகழாத வண்ணம் தற்காத்துக் கொள்ளலாம் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.